கோவையில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி: உரிய விலை கிடைக்காததால் டன் கணக்கில் தேக்கம்

கோவை: கோவையில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து கிலோ 5 முதல் 10 ரூபாய் வரை மட்டுமே இடைத்தரகர்கள் பேரம் பேசுவதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோவை பகுதிகளில் கடந்த ஆண்டு சின்ன வெங்காயத்தின் 100 ரூபாயை கடந்து விற்றதால், இந்த ஆண்டு 25,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டது. ஆனால் முந்தைய ஆண்டை கணக்கிட்டு வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இந்த ஆண்டு மொத்த வியாபாரிகள், இடைத்தரகர்கள் சின்ன வெங்காயத்தை அடிமட்ட விலைக்கு கேட்டுள்ளனர். குறிப்பாக சின்ன வெங்காயம் தரத்தின் அடிப்படையில் கிலோ 5 முதல் அதிகபட்சமாக 10 ரூபாய் வரையே விலைக்கு கேட்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

விலை வீழ்ச்சியால் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை டன் கணக்கில் பட்டறைகளில் பாதுகாத்து வைத்துள்ளனர். விதை வெங்காயம், உரம், நடவு கூலி, அறுவடை கூலிக்கு கூட வருமானம் வராது என விவசாயிகள் தவிக்கின்றனர். அதே நேரத்தில் சின்ன வெங்காயத்தை பட்டறையில் நீண்ட நாட்களுக்கு வைத்துக்கொள்ள முடியாது.வெயில் அடித்தால் சருகாகி எடை குறையும், மழை பெய்தால் சின்ன வெங்காயம் அழுகி கெட்டுப்போகும்.இதனால் சின்ன வெங்காயத்தை வைத்து என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். ஏக்கருக்கு 75 ஆயிரம் வரை செலவிட்டு, கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதால், ஏக்கருக்கு 1 லட்சம் வீதம் இழப்பீடு தரவேண்டும் எனவும் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இடைத்தரகர்கள் இன்றி சின்ன வெங்காயத்தை அரசே நேரடியாக கொள்முதல் செய்யவும் கோரிக்கை விடுகின்றனர்.        

Related Stories: