ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான்!: பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு..!!

ஜெய்ப்பூர்: ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது; நம் நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். இந்தியாவின் வளமான எதிர்காலக் குறியீட்டை எழுதத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞரையும் பாஜகவுடன் இணைக்க வேண்டும்.

குடும்ப அரசியலால் வஞ்சிக்கப்பட்ட இளைஞர்களின் நம்பிக்கையை பாஜகவால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர், மாநில மொழிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என தெரிவித்தார். கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சையை கிளப்ப முயற்சி நடக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பாஜக ஒவ்வொரு பிராந்திய மொழியிலும் காண்கிறது என கூறினார். இந்தி திணிப்பு பற்றி சர்ச்சை நிலவி வரும் நிலையில் பேசிய பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: