முழங்கால் அளவுகூட ஆழமில்லாத வெள்ளம் பாதித்த பகுதியில் பாஜக எம்.எல்.ஏ-வை முதுகில் சுமந்து சென்ற மீட்பு படை வீரர்!!

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடுமையான மழை கொட்டி வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழையால் அசாமில் 48 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் 248 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 27 மாவட்டங்களில் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற பாஜக எம்எல்ஏ முழங்கால் அளவுகூட ஆழம் இல்லாத பகுதியில் நடந்து செல்லாமல், மீட்புப் படை வீரர் அவரை தூக்கிக் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள லும்டிங் தொகுதி எம்எல்ஏ சிபு மிஸ்ரா,  அதே பகுதியில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிடச் சென்றார். அப்போது சிபு மிஸ்ராவை மீட்புப் படை வீரர் உப்புமூட்டையாக தூக்கிச் சென்று படகில் இறக்கிவிட்டார். முழங்கால் அளவிற்கு கூட தண்ணீர் இல்லாதது வீடியோவில் தெளிவாகி தெரிகிறது. இதில் இறங்கி நடந்து செல்லக் கூட பாஜக எம்எல்ஏவிற்கு துணிச்சல் இல்லையா என்று சமூக வலைத்தளங்களில் பலர் அதிர்ச்சி தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related Stories: