கடலூர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2-வது நாளாக கனகசபை மேல் ஏறி பக்தர்கள் தரிசனம்

கடலூர்: உலகபிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் சிதம்பரத்தில் உள்ளது. இந்த திருக்கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டபோது கனகசபை மீது ஏறி யாரும் சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்று குறைந்த பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக பல்வேறு  அமைப்பினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக சிதம்பரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தமிழக அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது. ஆனால் இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசாணை உத்தரவு நடைமுறைக்கு கொண்டுவரும் வகையில் வருவாய்துறையினர் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் பொதுமக்கள் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பொற்சபை என அழைக்கப்படும் கனகசபையை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி கனகசபை மீது ஏறி மனம் உருகி சாமி தரிசனம் செய்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.    

Related Stories: