சேலத்தில் நகைச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி: நகைக்கடை உரிமையாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

சேலம்: சேலத்தில் நகைச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். சேலம் மாநகரில் ராஜகணபதி கோயில் அருகே பொன்னம்மா பேட்டையில் லலிதாம்பிகை ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் 3 ஆண்டுகளுக்கு மேலாக நகைக்கடை நடத்தி வந்தவர் தங்கராஜ். இவர் தமது கடையில் நகைவாங்க பணத்தை டெபாசிட் செய்தால் ஓராண்டு முடிவில் நகைச்சீட்டு போட்டவர்களுக்கு நகையும், பணத்திற்கான வட்டியும் சேர்த்து தருவதாக கூறி கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார். இதனை நம்பி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் நகைச்சீட்டில் சேர்ந்தனர்.

இந்நிலையில் ரூ.5 கோடி மதிப்பில் பணம் வசூலித்த தங்கராஜ் 3 மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டதாக, தங்கராஜ் மற்றும் அவரது மனைவி மீது சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நகைக்கடை நடத்தி மோசடி செய்து தலைமறைவான தங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர். மேலும் அவர் நகைக்கடையில் இருந்த ஆவணங்கள் மற்றும் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள நகைக்கடை உரிமையாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: