சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் 4 பேர் கைது

பெரம்பூர், மே 20: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் மடுமா நகரை சேர்ந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற  கோயம்பேடு பகுதியை சேர்ந்த தமிமுன் அன்சாரி மற்றும் இதற்கு உடந்தையாக  இருந்த சிறுமியின் தாய் ஆரோக்கியமேரி (35) ஆகியோரை, போக்சோ சட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில்,  வேலூர் மாவட்டம் சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த கணேஷ் (எ) ராஜேஷ் (30)  என்பவர், இதே சிறுமியை அழைத்து சென்று குடும்பம் நடத்தியது தெரியவந்தது.  தலைமறைவாக இருந்த அவரை நேற்று போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

* புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்த நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியை சேர்ந்த ரஜினி (40), பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ரஜினியை கைது செய்தனர்.

* பெரம்பூரை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய பழைய வண்ணாரப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்த தேவராஜை (21), போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

* துரைப்பாக்கம் எழில் நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த 14 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்தபோது, பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (83) என்பவர் மீது, கண்ணகிநகர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, திருநெல்வேலியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர்.

Related Stories: