பைனான்சியர் கொலை வழக்கில் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் முக்கிய குற்றவாளி சரண்

அண்ணாநகர்: சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (36). இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் தனது நண்பர்  ரமேசுடன், ஷெனாய் நகர் அருகே பைக்கில் சென்றபோது, 3 பைக்குகளில் வந்த 6 பேர், ஆறுமுகத்தை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி  சந்திரசேகர் (28), தொழில் போட்டி காரணமாக ஆறுமுகத்தை கொன்றது தெரியவந்தது. இவர், கடந்த 2018 மற்றும் 2021ம் ஆண்டில் ஆறுமுகத்தை கொலை செய்ய முயன்றதும், இவர் மீது 2 கொலை, 2 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.

இதையடுத்து 6 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் மற்றும் அவனது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த ரவுடி ரோஹித்ராஜ் (25) ஆகியோர் நேற்று மாலை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: