பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பட்டு: பேரறிவாளன் விடுதலையை கண்டித்து, அம்மையார்குப்பத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், 31 ஆண்டுகளாக சிறையிலிருந்த பேரறிவாளன் விடுதலை செய்த உச்ச நீதிமன்றம் தீர்பை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அம்மையார்குப்பத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம்  ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி நெசவாளரணி மாநில தலைவர் ஜி.என்.சுந்தரவேலு தலைமை வகித்தார்.

இதில், 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்று வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு கைகளில் பதாகைகள் ஏந்தி முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்பை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பட்டன. இதில், மாநில வழக்கறிஞரணி பொது செயலாளர் முருகன், மாநில மகளிரணி தலைவி மாதவி, நிர்வாகிகள் பாண்டுரங்கன், துளசிராமன், தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், ஆர்.கே.பேட்டை பஜாரில் ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி காளத்தீஸ்வரன், வட்டார தலைவர் முருகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

பொன்னேரி: பொன்னேரியில் உள்ள அண்ணா சிலை முன்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வாயில் வெள்ளை துணி கட்டி அறவழியில் மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை தீர்வாகாது, நாங்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

பூந்தமல்லி:  பூந்தமல்லி பேருந்துநிலையம் ராஜிவ்காந்தி சிலை அருகே மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருவேற்காடு லயன் டி.ரமேஷ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்ணில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு அமர்ந்து அறவழிப்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு உள்பட ஏராளமான காங்கிரசார் பங்கேற்றனர்.

திருவள்ளூர்:  பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து  திருவள்ளூரில் காங்கிரசார் வாயில் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார். இதில் மாநில, மாவட்ட  நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன்,  சி.பி.மோகன்தாஸ், ஜெ.டி.அருள்மொழி,  டி.வடிவேலு, எஸ்.ஏ.அமுதன், தளபதி மூர்த்தி, எஸ்.சரஸ்வதி, டி.எஸ்.இளங்கோவன்,  ஆ.திவாகர், பூண்டி ராஜா, பிரபாகரன், உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories: