பெரியபாளையம் அருகே சிறுவாபுரி முருகன் கோயில் குளம் சீரமைப்பு: பொறியாளர்கள் ஆய்வு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே சிறுவாபுரி முருகன் கோயில் குளம் சீரமைக்க பொறியாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சிறுவாபுரி கிராமத்தில் புகழ் பெற்ற பாலாசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலுக்குப் பின்புறம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் திருக்குளம் உள்ளது. படிகட்டுகள் இன்றி உள்ள இந்த குளத்தில் ராமபிரானின் மைந்தர்களாகிய லவன், குசன் ஆகியோர் நீராடியதாக புராண வரலாறு உண்டு. இந்த குளத்தினை சீரமைத்து தருமாறு பல்லாண்டு காலமாக பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, இந்த குளத்தினை சீரமைக்க இந்து சமய அறநிலைய துறை அமைச்சரால் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து குளங்கள் சீரமைப்பு பொறியாளர் சிதம்பரம், திருவள்ளூர் மாவட்ட பொறியாளர் ஜீவானந்தம், பொறியாளர் வேதநாயகம் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இந்த குளத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மதிப்பீடு தயாரிக்க அளவீடு எடுத்தனர். மதிப்பீடு தயாரித்து துறை அனுமதி பெற்று பின்னர் குளத்தினைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: