ரூ.5 கோடி அரசு நிலம் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சி ராம் நகர் விரிவு பகுதியில் அடையாறு கால்வாய் அமைந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இந்த கால்வாயை ஒட்டிய பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி, கடந்த 13 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இதையடுத்து, கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்ற பொதுப் பணித்துறை சார்பில் 6 மாதங்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், வருவாய் துறை, பொதுப்பணித் துறை ஆகிய அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மேற்கண்ட பகுதிக்கு சென்று, ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால்,  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கூடுதலாக போலீசாரை  வரவழைத்து, வீட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அடையாறு கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து, அப்பகுதியை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க எச்சரிக்கை பலகை வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ₹5 கோடி என கூறப்படுகிறது.

Related Stories: