பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதால் தமிழகத்தில் திருமணப்பதிவு அதிகரிப்பு: கடந்தாண்டில் மட்டும் 1.57 லட்சம் பதிவு

சென்னை: பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதால்  தமிழகத்தில் திருமணப்பதிவு அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில் மட்டும் 1.57 லட்சம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் திருமணங்கள் பதிவு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் அனைத்து திருமணங்களும், மத பாகுபாடின்றி  சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் திருமணப்பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யவில்லை எனில் மேலும், 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த 150 நாட்கள் கால அவகாசத்துக்குள் திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த பதிவை மேற்கொள்ள தற்போது பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தமிழக அரசு சார்பில் மணமகன், மணமகள் வீடு அமைந்துள்ள பகுதிகளில் திருமணம் பதிவு செய்து கொள்ளலாம் என்று சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 2020-21ஐ காட்டிலும் 2021-22ம் ஆண்டில் திருமண பதிவு அதிகரித்து இருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக, கடந்த 2021ல் தமிழ்நாடு திருமணங்கள் சட்டத்தின் கீழ் 70,065 பதிவுகளும், இந்து திருமண சட்டத்தின் கீழ் 45,212 பதிவுகளும், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் 4537 பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2021-22ம் ஆண்டில்  தமிழ்நாடு திருமணங்கள் சட்டத்தின் கீழ் 96,911 பதிவுகளும், இந்து திருமண சட்டத்தின் கீழ் 51,261 பதிவுகளும், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் 8863 பதிவு செய்யப்பட்டுளளது என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: