முதலீட்டாளர்கள் அதிர்ச்சி பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.6.71 லட்சம் கோடி இழப்பு

மும்பை: பங்குச்சந்தையில் கடும் சரிவால், முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.6.71 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்திய பங்குச்சந்தைகள் அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், நேற்று முன்தினம் வர்த்தக முடிவில் 54,208.53 புள்ளிகளாக இருந்தது. நேற்று காலை வர்த்தகம் துவங்கியதும்,  53,070.30 புள்ளிகள் என சரிவுடன் ஆரம்பித்தது.  வர்த்தக இடையில் அதிகபட்சமாக 52,669.51 புள்ளிகள் வரை சரிந்தது. இருப்பினும் வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட  1,416.30 புள்ளிகள் அதாவது, 2.61 சதவீதம் சரிந்து 52,792.23 ஆக இருந்தது.  இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி, 430.90 புள்ளிகள் அதாவது 2.65 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தது.

 இதன் காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலோகம் சார்ந்த பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. நேற்றைய சரிவால், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் ரூ.6.71 லட்சம் கோடி குறைந்து ரூ.2,49,06,394.08 கோடியாக இருந்தது. ரஷ்யா உக்ரைன் போர், சீனாவின் பூஜ்ய கொரோனா கொள்கை, பண வீக்கம், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று முன்தினம் ரூ.1,254.64 கோடியை விலக்கிக் கொண்டது, ரூபாய் மதிப்பு சரிவு போன்றவையும் சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Related Stories: