புது உத்திகளுடன் தரமாக, விரைவாக தயாராகிறது கலைஞர் நூலக கட்டுமான பணிகள் ஜூனில் முடியும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

மதுரை: மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகள் ஜூனில் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில், ரூ.114 கோடி செலவில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று ஆய்வு செய்தனர். மதுரை எம்பி வெங்கடேசன், கலெக்டர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: கலைஞர் நூலக பணிகள் புதிய உத்திகளை கையாண்டு விரைவாக, தரமாக கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இப்பணிகள் ஜூன் மாதத்தில் நிறைவு பெறும். நாற்காலி அமைத்தல் உள்பட உள்வேலைப்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும். முதன்முறையாக 2 லட்சத்து 40 ஆயிரம் ச.அடியில் 7 மாடி கொண்ட கட்டிடம் மதுரையில் அமைகிறது. கன்னியாகுமரி முதல் தென் மாவட்டங்களின் அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் நூலகம் அமையும். ரூப் கார்டன் கட்டிடக்கலையுடன் மிகச்சிறந்ததாக நூலகம் அமையும்.

சட்டமன்றத்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் தீர்மானம் இயற்றினால் ஆளுநர் உதவிகரமாக இருக்கவேண்டும் என்பதே நீதிமான்களின் கருத்தாக உள்ளது. முதல்வர் தலைமையில் சட்டமன்றத்தில் நீட் விளக்க தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றி, ஆளுநருக்கு பலமுறை அழுத்தம் கொடுத்து வலிறுத்தியதன்பேரில், தீர்மானத்தை அவர் பரிந்துரை செய்து டெல்லிக்கு அனுப்பியுள்ளார். இதே அழுத்தத்தை டெல்லிக்கும் கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்வதுதான் எங்கள் தலையாய இலக்கு. மதுரையில் கோரிப்பாளையம் மேம்பாலப் பணி அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது விரைவில் ஒப்பந்தப் பணி தொடங்கவுள்ளது.

மதுரையில் ரூ.900 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முடிக்கப்பட்ட பணிகள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். நெல்பேட்டை அவனியாபுரம் பாலம் திட்ட வரைவை தயாரிக்கும் பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: