ரயில்வே துறை மூலம் தமிழகத்தில் ரூ.30 ஆயிரம் கோடியில் திட்டங்கள்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

சென்னை: ரயில்வே துறை மூலம் தமிழகத்தில் ரூ.30 ஆயிரம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். சென்னை ஐஐடியில், அடுத்த தலைமுறையின் போக்குவரத்து வசதிக்காக ஹைப்பர்லூப்பை உருவாக்கிய மாணவர்களுடன் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கலந்துரையாடினார். பின்னர், 8 ஐஐடி நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள 5 ஜி நெட்வொர்க் சேவையையும்  பார்வையிட்டு பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விழிநாதன், தெற்கு ரயில்வே  பொது மேலாளர் மல்லையா, பொதுமேலாளர் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 பின்னர், ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:

 ரயில்வே துறையில் தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் வழங்கியதை விட இப்போது நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.3,861 கோடி தமிழ்நாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  திண்டுக்கல் - சபரிமலை உள்ளிட்ட 3 வழித்தடங்களில் சபரிமலைக்கு ரயில் இயக்குவது பரிசீலனையில் இருக்கிறது.

  சென்னை எழும்பூர், காட்பாடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை ஆகிய 5 ரயில் நிலையங்களை உலகளாவிய தரத்தில் மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க உள்ளது.  தமிழ்நாட்டில் ரூ.30,000 கோடியில் திட்டங்களை ஒன்றிய ரயில்வே துறை செயல்படுத்த உள்ளது. கூடுதலாக தேவைப்பட்டால் ரூ.40,000 கோடி வரை திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களுக்கு பெயர் வைப்பதிலும், ரயில்களுக்கு பெயர் வைப்பதிலும் மொழி பாகுபாடு பார்ப்பதில்லை. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் நேசிக்கிறேன். கொரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான 50% கட்டண சலுகையை மீண்டும் வழங்கும் திட்டம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: