பாஜ தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு: மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு கோரினர்

சென்னை: பாஜ தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேற்று திடீரென சந்தித்து பேசினர். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் பாஜ தலைவர் அண்ணாமலையை நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, வைத்திலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை வழங்கி ஆதரவு கோரினார்.

 இந்த சந்திப்புக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அளித்த பேட்டியில், ‘‘மாநிலங்களவை தேர்தலில் எங்களுடைய  ஆதரவு உங்களுக்கு உண்டு என்று கூறியிருக்கிறார். இது எங்களுக்கு  மகிழ்ச்சியை தந்தது. அதனால்,  ராஜ்யசபா தேர்தலில் பாஜ எங்களுக்கு ஆதரவு  அளிக்கிறது’’ என்றார். தொடர்ந்து பாஜ தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‘‘ராஜ்யசபா தேர்தலில் பாஜவின்  4 எம்எல்ஏக்களும் அதிமுகவின் பக்கம் நிற்போம். ராஜிவ் காந்தி கொலை வழக்கில், பாஜவை பொறுத்தவரையில் 7 பேருமே குற்றவாளிகள் தான்.

காங்கிரஸ் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. சிறையில் இருந்து வெளிவந்தவரை கொண்டாடுவது, வரலாற்றில் தவறான முன்னுதாரணத்தை எடுத்து வைக்கிறது. நீதிமன்ற உத்தரவில் பேரறிவாளன் நிரபராதி என எங்கும் குறிப்பிடவில்லை, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல’’ என்றார்.

Related Stories: