கோவை வஉசி மைதானத்தில் அகழாய்வுகளில் கண்டெடுத்த தொல்பொருட்கள் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை: கோவை வஉசி மைதானத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்து, பார்வையிட்டார். தமிழக அரசு தொல்லியல் துறை சிவகங்கை மாவட்டம் - கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம் மற்றும் மணலூர், தூத்துக்குடி மாவட்டம் - சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், - கிருஷ்ணகிரி மாவட்டம் - மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துளுக்கார்பட்டி,  தர்மபுரி மாவட்டம் - பெரும்பாலை ஆகிய 7 இடங்களில் அகழாய்வு செய்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட  தொல்பொருட்கள், அவற்றின் மாதிரிகளின் கண்காட்சி மற்றும் தமிழக அரசின்  ஓராண்டு சாதனைகள் பற்றிய ஓவியக்கண்காட்சி கோவை வஉசி மைதானத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சி அரங்கு 10 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.  இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ரிப்பன் வெட்டி துவங்கி  வைத்து, பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள்  தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி, தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன்,  கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி  உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழடி, மயிலாடும்பாறை, சிவகளை, கொடுமணல், கொற்கை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் கண்காட்சியில் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

தமிழர்களின் 4200 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் வகையில் அகழ்வாய்வில் கிடைத்த ஈட்டி முனைகள், அம்பு முனைகள், கத்திகள், கோடரி, ஈமச் சின்னங்களில் வைக்கப்படும் படையல் பொருட்கள், மூன்றுகால் குடுவை உள்ளிட்ட பானைகள், கிண்ணங்கள், சுடுமண்ணால் ஆன பொருட்களும் காட்சி படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி வருகிற 25ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. பொதுமக்கள் பார்வையிட்டு செல்லலாம்.

190 ஓவியங்களை ரசித்த முதல்வர்

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி  கூறும் வகையில் 190 ஓவியங்கள் வரையப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு  வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர்கள்  வரைந்துள்ளனர். ஓவியங்களை ஒவ்வொன்றாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசித்து பார்வையிட்டார். சில படங்களை சுட்டிக்காட்டி அருகில் இருந்த  அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மகிழ்ந்து பேசினார். அவரது மனைவி துர்கா  ஸ்டாலினும் கண்காட்சியை பார்வையிட்டார்.

ஊட்டி மலர் கண்காட்சி இன்று துவக்கம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை விழா மலர் கண்காட்சி இன்று (20ம் தேதி) துவங்கி 5 நாட்கள் நடத்தப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதையொட்டி பூங்கா பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. பல லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 20 அடி உயரம், 75 அடி நீளம் கொண்ட வேளாண் பல்கலைக்கழகத்தின் முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி 200 ஆண்டையொட்டி ‘ஊட்டி 200’ என்ற சிறப்பு மலர் அலங்காரம், குழந்தைகளை கவரும் வகையில் பல வகையான கார்ட்டூன் வடிவ அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: