பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் வெப்பம்: 100 மடங்கு அதிகரிக்கும்: பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

லண்டன்: பருவநிலை மாற்றத்தால் இந்தியா, பாகிஸ்தானில் வெப்ப அலை 100 மடங்கு அதிகரிக்கும் என்றும்,  இனி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை  இந்த நிகழ்வு நடைபெறும் என்றும் பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 இந்தியாவில் வழக்கமாக மே, ஜூன் மாதங்களில்தான் வெப்ப அலை வீசும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே அது வீசத் தொடங்கியது. மார்ச் மாதத்தின் சராசரி வெப்பநிலை, கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. மே மாதம் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், மபி  மாநிலங்களில் சில இடங்களில் 120 டிகிரி பாரன்ஹீட்டை  வெப்பநிலை தொட்டுள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை வருமாறு: இந்தியா, பாகிஸ்தானில் கடந்த 1900ம் ஆண்டுக்கு பிறகு 2010ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தான்  அதிகளவு வெப்பநிலை பதிவாகியது. ஆனால், அதை விட அதிக அளவு வெப்பநிலை பதிவு ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். வழக்கமான பருவநிலை மாற்றங்களின்படி, 312 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்  வெப்ப அலை அதிகரிக்கும். தற்போதைய பருவநிலை மாற்றத்தின்படி இது 3.1 ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இந்த நுாற்றாண்டின் இறுதிக்கு பிறகு ஒன்றே கால் ஆண்டுகளுக்கு ஒரு முறை வெப்ப அலை அதிகரிக்கும்.

கடந்த சில நாட்களில் இந்தியா, பாகிஸ்தானில் வெப்ப அளவு 122 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளதை பார்க்கும்போது கடுமையான வெப்ப அலை மக்களையும், அவர்களுடைய வாழ்வாதரத்தையும் பாதிக்கும் என்பதை உணர்த்துகிறது. பாகிஸ்தானில் கடந்த ஞாயிறன்று 123 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியது. பருவமழை காலம் நெருங்கி வருவதால் அங்கு தற்போது வெப்பம் குறைந்து காணப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: