இலங்கையில் நடந்த வன்முறையின்போது கண்டதும் சுட உத்தரவிடவில்லை: நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் பேச்சு

கொழும்பு: இலங்கையில் நடந்த வன்முறையின்போது கண்டதும் சுட பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலைக்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலகக் கோரி ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 9ம் தேதி திடீரென மகிந்தா ஆதரவாளர்கள் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பொதுமக்களும் தாக்குதல் நடத்தியதால், பயங்கரம் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 10 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆளும்கட்சியை எம்பிக்கள் பலர் ஈடுபட்டது தெரிந்தது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் மகிந்த, கோத்தப ராஜபக்சே பூர்வீக வீடுகள், ஆளும்கட்சி எம்பிக்கள், மாஜி அமைச்சர்கள் மற்றும் ராஜபக்சே குடும்பத்தினர் பினாமிகள், அதிகார வர்க்கத்தினரின் வீடுகளை தீயிட்டு கொளுத்தினர். வன்முறை நாடு முழுவதும் பரவியதால், கலவரத்தில் ஈடுபடம் மக்களை கண்டதும் சுட ராணுவத்திற்கும்,  போலீசாருக்கும் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில்,  நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, வ‘ன்முறையாளர்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்த பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக  எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. போலீசார் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்துவதற்குத் தேவையிருந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தலாம். ஆனால், அதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்ததாக இலங்கை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய பஞ்சம் வரும்: நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் நேற்று பேசுகையில், ‘மே மாதத்துடன் இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் உதவிகள் முடிவுக்கு வரும். பின்னர், இலங்கையில் மிகப் பெரிய அளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மக்கள் வாழ முடியாத அளவுக்கு பஞ்சம் ஏற்படும்,’ என தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள இந்தியர்கள் இணையதளத்தில் பதிய உத்தரவு: இலங்கையில் உணவு, பெட்ரோல், டீசல், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையில் உள்ள இந்தியர்கள் www.hcicolombo.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என தனித்தனி இணைய தளங்களில் பதிவு செய்ய வேண்டும். இலங்கையில் தங்கி இருக்கும் இந்தியர்கள் https://hcicolombo.gov.in/national_registration_nris என்ற இணையதளத்திலும், அங்குள்ள இந்திய மாணவர்கள், https://hcicolombo.gov.in/national_registration_students என்ற இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்: அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகக்கோரி அனைத்து பல்கலைக் கழக மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தாமரை தடாகம் பகுதியில் இருந்து பிரமாண்ட பேரணி நடந்துவதற்காக மாணவர்கள் தயாராகினர். பேரணி புறப்பட்டதும், மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி விரட்டியடித்தனர்.

மேலும் 3 எம்பிக்களிடம் விசாரணை: காவல்துறை செய்தி தொடர்பாளர் நிஹால் தல்துவ கூறுகையில், ‘வன்முறையில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கு சொந்தமான 78 சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட 1059 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை தூண்டியதாக, வீடியோ ஆதாரத்தின்படி லங்கை பொதுஜன பொருமுனா கட்சியை சேர்ந்த எம்பிக்கள் சனத் நிஷாந்தா, மிலன் ஜெயதிலகே ஆகியவர்கள் கைது செய்யப்பட்டு, வரும் 25ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது, ஆளும் கட்சியை சேர்ந்த மேலும் 3 எம்பி.க்களிடம் நாடாளுமன்றத்தில் நேற்று வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது,’ என்றார்.

Related Stories: