டாடா நிறுவன தலைவர் விவகாரம் சைரஸ்: மிஸ்ட்ரியின் சீராய்வு மனு டிஸ்மிஸ்

புதுடெல்லி: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்ட்ரியின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ரத்தன் டாடா வெளியேறிய பிறகு புதிய தலைவராக கடந்த 2012ம் ஆண்டு சைரஸ் மிஸ்ட்ரி நியமிக்கப்பட்டார். இதனால், அதிருப்தி அடைந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு, கடந்த 2016ம் ஆண்டு அவரை பதவி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில்  மிஸ்ட்ரி  மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த தீர்ப்பாயம் மிஸ்ட்ரியை மீண்டும் அதே பதவியில் நியமிக்கும்படி  கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டது.   இதையடுத்து, தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை முன்னதாக விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு, சைரஸ் மிஸ்ட்ரியின் பணி நியமனத்திற்கும் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் தடை விதித்தது.  இந்நிலையில், இந்த விவகாரத்தில் சைரஸ் மிஸ்ட்ரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் முந்தைய தீர்ப்பில் தனக்கு எதிரான சில கருத்துக்களை நீக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

Related Stories: