ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் செய்யப்படும் பரிந்துரைகள், மாநில அரசுகளை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

 இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), ஜூலை 1, 2017ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஒன்றிய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி), மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி (யுஜிஎஸ்டி) என்று  4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி.யில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த விதிமுறைகளை வகுப்பதற்காக, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 33 உறுப்பினர்களை கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகள் அனைத்தையும் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், தனியார் அமைப்பு ஒன்றின் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளையும், பரிந்துரைகளையும் மாநில அரசுகள் கடைபிடித்து அமல்படுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது,’ என கூறப்பட்டு இருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், ‘ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகளை மாநில அரசுகள் செயல்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஒன்றிய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில தினங்களுக்கு முன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் சந்திரசூட், சூர்யகாந்த் மற்றும் பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநிலங்கள், ஒன்றிய அரசு ஆகியவைக்கு சில சிறப்பு அதிகாரங்கள் சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன. அரசியல் சாசன பிரிவு 246ஏ படி, வரி விதிப்பு விவகாரத்தில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு சம அளவு அதிகாரம் உள்ளது. இதைத் தவிர,  சட்டப்பிரிவு 279ன் படி ஒன்றியம், மாநில அரசுகளுக்கான ஒருங்கிணைந்த கூட்டாட்சி தத்துவத்தை அது தெளிவுபடுத்துகிறது. மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலில் வாக்களிக்கும் கட்டமைப்பு என்பது 1/3 என்ற சதவீதத்தில் ஒன்றிய அரசுக்கும், 2/3 சதவீதம் மாநில அரசுகளுக்கும் உள்ளது.

இந்தியக் கூட்டாட்சி என்பது மாநிலங்களும், ஒன்றிய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக் கடிய இடமாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. அதனால், இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பட்சத்தில் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. மேலும், ஜிஎஸ்டி விவகாரங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் சம உரிமை உள்ளது.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

‘அரசியல் சார்ந்த இடமாக மாறிய ஜிஎஸ்டி கவுன்சில்’

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மேலும், ‘ஜிஎஸ்டி  கவுன்சில் என்பது அரசியல் சார்ந்த இடமாக தற்போது மாறியுள்ளதை மறுக்க  முடியாது. இந்த நிலை என்பது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை முழுமையாக  பாதிக்கச் செய்யும். ஏனெனில், ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று  சார்ந்து இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. இந்திய அரசியலமைப்புச்  சட்டத்தின்படி, பல்வேறு குழப்பங்களை தவிர்ப்பதற்காக மட்டுமே கூட்டாட்சித்  தத்துவத்தில் ஒன்றிய அரசுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்குகிறது,’ என கூறியுள்ளனர்.

Related Stories: