×

தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த வகையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதே இலக்கு: தொழில்முனைவோர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: தமிழகம் தொடர்ந்து தொழில் வளர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ வேண்டும். தெற்காசியாவிலேயே முதலீடுகள் செய்ய உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே முக்கிய இலக்கு. அரசு ஏற்படுத்தியுள்ள இந்த வசதி வாய்ப்புகளை தொழில் துறையினர் நன்கு பயன்படுத்தி, மேன்மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என கோவையில் நடந்த தொழில்முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கோவை,  திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தொழில் அமைப்பினருடனான கலந்துரையாடல்  கூட்டம், கோவை ரெசிடென்சி ஓட்டலில் நேற்று நடந்தது. இதில், மொத்தம் 39  தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தகவல் தொழில்நுட்ப துறையிலும் கோவை மாவட்டம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னைக்கு  அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் 2வது பெரிய மென்பொருள் தயாரிப்பு  நகரமாகவும் கோவை உருவெடுத்துள்ளது. இங்குள்ள டைடல்  பூங்கா மற்றும் பிற திட்டமிடப்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மூலம்,  உலக அளவில் அவுட்சோர்சிங் நகரங்களில் ஒரு முக்கிய இடத்தை கோவை பிடித்துள்ளது.

நாங்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வந்து,  இதுவரை 5 முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி உள்ளோம். தமிழ்நாட்டில்  நடைபெற்ற 4 மாநாடுகளில் ஒன்று, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் நடந்தது. ஏனென்றால், தமிழ்நாட்டின் தொழில் துறையினுடைய மிக முக்கிய  தூண்களில் ஒன்று இந்த கோவை மாவட்டம் என்பதற்காகத்தான். கோவை மாநகரத்தின் வளர்ச்சிக்கு, மேற்கு  மண்டலத்தின் தொழில்  முன்னேற்றத்திற்கு, கோவை விமான நிலைய விரிவாக்கம் அவசியம் தேவை. இதனை  உணர்ந்து, இந்த விமான நிலையத்தை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கான பணிகளை  கலைஞர் முதல்வராக இருந்தபோது  தொடங்கி  வைத்தார்.

  இந்த பணிகளுக்கான திட்டம் வகுக்கப்பட்டு, நில  எடுப்பு பணிகள் 2010ல் தொடங்கப்பட்டன. கடந்த ஆட்சியின்போது, பத்தாண்டு காலமாக சரியான முன்னேற்றம் இல்லாமல் தொய்வடைந்த பணிகள் இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1,132 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்த பணிகள் மிக விரைவில்  முடிக்கப்பட இருக்கிறது. இதன் மூலமாக, சென்னைக்கு அடுத்தபடியாக,   தமிழ்நாட்டின் தலைசிறந்த பன்னாட்டு விமான நிலையமாக கோவை விமான நிலையம்  உயர்த்தப்படும். தமிழக பொருளாதாரத்தை, 1 டிரில்லியன் டாலராக உயர்த்தும் இந்த அரசினுடைய  லட்சியத்தை அடைய, கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது.

வளம்மிக்க இந்த மாவட்டத்தை  மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில்,  புத்தாக்கம், தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம்,  வான்வெளி மற்றும் பாதுகாப்பு, ஆராய்ச்சி   மற்றும்  மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான புதிய  மையமாக கோவை உருவாக்கப்படும். இதற்காக  தகுந்த ஆலோசகரை நியமித்து, விரிவான திட்டம் ஒன்று  தயாரிக்கப்படும். இந்த விரிவான திட்டம், கோவைக்கான புதிய பெருந்திட்டமாக (நியூ மாஸ்டர் பிளான்) இருக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்படும். கோவை நகரின்  கட்டமைப்பு தேவைகளுக்கான  எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக்கூடிய வகையில்,  இந்த பகுதிக்கான புதிய  பெருந்திட்டம் உருவாக்கப்படும்.

  தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனம் (டிட்கோ), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்),  தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சிட்கோ) போன்ற அரசு பொதுத்துறை  நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்  தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சி பூங்காக்களை நிறுவ  ஊக்குவிக்கப்படும். அதன்படி, அறிவுசார்  ஆராய்ச்சி பூங்கா ஒன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும்.

 இந்த  அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுவரையில், ரூ.69,375 கோடி அளவிற்கு முதலீடுகளும், 2,25,000 பேருக்கு வேலைவாய்ப்புகளும்  உருவாக்கக்கூடிய வகையில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில் துறையின் வளர்ச்சிக்கு  இந்த அரசு மேற்கொண்டுவரும்  சீரிய      முயற்சிகளுக்கு அத்தாட்சியாக, அண்மையில், ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார  அமைச்சகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும்  முதலீட்டிற்கான சந்திப்பில், நமது  தொழில் துறையின் வழிகாட்டி நிறுவனம், ஆசியா-ஓசியானியா  மண்டலத்தின் “சிறந்த முதலீட்டு ஊக்குவிப்பு முகமைக்கான” விருது வென்றுள்ளது.

 நமது மாநிலம் தொடர்ந்து தொழில் வளர்ச்சி பெற்று அகில இந்திய அளவில்  முன்னணி மாநிலமாக திகழ வேண்டும். அதுமட்டுமல்ல, தெற்காசியாவிலேயே  முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிட வேண்டும்  என்பதே நமது முக்கிய குறிக்கோளாக உள்ளது. அரசு ஏற்படுத்தியுள்ள இந்த வசதி வாய்ப்புகளை தொழில் துறையினர் அனைவரும்  நன்கு பயன்படுத்தி, மேன்மேலும் வளர்ச்சி பெற வேண்டும்.

 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான  இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட 49 விழுக்காடு  அதிகரிக்கப்பட்டு, ரூ.911.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சொத்து பிணையில்லா  கடன் எளிதில் பெற ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு கடன்  உத்தரவாத திட்டம் (டிஎன்சிஜிஎஸ்) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறு, சிறு மற்றும்  நடுத்தர தொழில் நிறுவனங்களின் முக்கிய தேவையான தொழில்மனைகளை குறைந்த  விலையில் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

 தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தொழில் வளர்ச்சிக்கு  வழிகோலும் விதமாக மூன்று மண்டல அளவிலான புத்தொழில் மையங்கள் அமைக்கப்படும். ஈரோட்டில், மண்டல புத்தொழில் மையம் அமைக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கு மாவட்டங்களில், இயற்கை இழைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும்   பாரம்பரியமான ஜவுளிகளின் ஏற்றுமதி  அதிக அளவில் உள்ள போதிலும், உலகளவில்  பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான தேவை மிக வேகமாகவும்,  சீராகவும் அதிகரித்து வருகிறது. எனவே, இவ்வாறான மதிப்புக்கூட்டு ஜவுளிகளின்  உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள தொழில்முனைவோர் முன்வரவேண்டும்.

அதிக முதலீடுகளை மேற்கொண்டு,  தயாரிப்புகளை பலப்படுத்துங்கள். பல்வகைப்படுத்துங்கள், விரிவாக்கத்தை  மேற்கொள்ளுங்கள். மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்யுங்கள். இதன்மூலம், தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்முனை பொருளாதாரமாக மாற வேண்டும்  என்பதுதான்  என்னுடைய இலக்கு. உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சி - இவை மூன்றும்  ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்தவை. இவை மேம்பட்டால், ஒரு மாநிலத்திற்கு  ஒட்டுமொத்தமான வளர்ச்சி தானாக வந்து சேரும்.   இவை மூன்றையும்  வலுப்படுத்துவதற்கான வழிகளை மேற்கொள்ளுங்கள். இந்த சந்திப்பானது உங்கள் தொழிலை மட்டுமல்ல, இந்த மாநிலத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவதாக அமைய வேண்டும்.  உங்களது தொழில் முயற்சிகள் அனைத்திற்கும், இந்த அரசு நிச்சயமாக உறுதுணையாக இருந்து, அனைத்து உதவிகளையும் செய்யும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 நிகழ்ச்சியில் அமைச்சர்கள்  தா.மோ.அன்பரசன், செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் ஆ.ராசா எம்.பி., கோவை மாநகராட்சி  மேயர் கல்பனா ஆனந்தகுமார், தொழில் துறை செயலாளர்  கிருஷ்ணன், தொழில்துறை ஆணையர் மற்றும் இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன், கோவை  மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமைச்சர்கள் சந்திப்பார்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘தொழில்துறையினரை அமைச்சர்கள் அடிக்கடி சந்திப்பார்கள். தேவைப்பட்டால் நானும் வருவேன்.  உங்களுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டாலும்  என்னுடன் தொடர்பில் இருக்கலாம். அதிகாரிகளையும் தொடர்பு கொள்ளலாம்.  எப்போது வேண்டுமானாலும் எங்களை சந்திக்க நீங்கள் வரலாம்.  பத்து ஆண்டு  கணக்குகளை வணிகவரித்துறை கேட்கும் விவகாரம் தொடர்பாக வணிகவரித்துறை  அமைச்சரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

நூல் விலை உயர்வு பாதிப்பை தீர்க்க அரசு முயற்சிக்கும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘நூல் விலை உயர்வு நமது மேற்கு  மாவட்டங்களில்  பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கச்சா  பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வால், பலர் தொழிலை தொடர்ந்து  நடத்த  முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதன் தீவிரத்தை உணர்ந்த நான், பிரதமர் மோடி மற்றும் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறேன். இப்பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி, அந்த கடிதத்தில் குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன்.

நான் மட்டுமல்ல, கனிமொழி எம்.பி. தலைமையில் மேற்கு மாவட்டங்களை சார்ந்திருக்கக்கூடிய  அனைத்துக் கட்சி எம்பிக்கள், ஒன்றிய அமைச்சர்கள்  நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல் ஆகியோரை நேரில் சந்தித்து கடிதம்  கொடுத்துள்ளனர். உங்கள் கவலைகளை விரைந்து தீர்ப்பதற்கான எல்லா முயற்சிகளையும் இந்த அரசு எடுத்துக்கொண்டு  வருகிறது. நான், கோவையில் வந்து   இறங்கியவுடன், உடனடியாக ஒன்றிய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன்   தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். உங்கள் சார்பாக அந்த கோரிக்கையை நான்   எடுத்து வைத்தேன்’’ என்றார்.



Tags : Tamil Nadu ,South Asia ,K. Stalin , South Asia, Investment, Entrepreneurship Meeting, Speech by Chief Minister MK Stalin
× RELATED தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட...