திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு

வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த பூந்தோட்டம் ஊராட்சி சாத்தனூரை சேர்ந்தவர் வெங்கடேசன்(55). இவர் ஆலங்குடி சந்தைவெளி பகுதியில் வீடு கட்டுவதற்காக கடந்தாண்டு இடம் வாங்கினார். அந்த இடத்தில் பில்லர்கள் அமைப்பதற்காக நேற்று மாலை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த பள்ளத்தில் 3 அடி உயர உலோக பாவை சிலை, ஒரு அடி உயர பெருமாள் சிலை, ஒரு பலிபீடம், திருவாச்சி, சிறிய அளவிலான கலயம் கிடைத்தது. இந்த கலயத்தில் ராமானுஜர் உள்ளிட்ட 9 மிகச்சிறிய அளவிலான சாமி சிலைகள் உள்ளிட்ட 24 பொருட்கள் இருந்தது. மொத்தத்தில் சாமி சிலை உட்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. 3 அடி உயர உலோக சிலையின் வலது பக்க கை உடைந்த நிலையில் காணப்பட்டது.

இதுகுறித்து வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபால கிருஷ்ணனுக்கு ஆலங்குடி விஏஓ நவீன் மற்றும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தாசில்தார் சந்தான கோபால கிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் ஆனந்த் மற்றும் வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உலோக சிலைகளை கைப்பற்றி தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்தனர்.  வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.  மீண்டும் பள்ளம் தோண்டி வேறு ஏதேனும் சிலைகள் இருக்கிறதா என்று பார்க்க தாசில்தார் சந்தான கோபால கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: