மூணாறில் 200 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து : 8 மாத குழந்தை உள்பட 2 பேர் பலி: ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 மாத குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் அடங்கிய சுற்றுலாப் பயணிகள் குழுவினர் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். இன்று காலை 7 மணியளவில் இவர்களது கார் தேவிகுளம் கேப் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதுகுறித்து அறிந்ததும் தேவிகுளம் தீயணைப்பு படை மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் காரில் இருந்த நவ்ஷாத் (38) மற்றும் 8 மாத பெண் குழந்தையான நைசா  ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தேவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: