மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் கார் கவிழ்ந்து சுற்றுலா பயணி பலி: சிறுமி உள்பட 4 பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா பயணி சம்பவ இடத்தில் பலியானார். சிறுமி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பள்ளி கனிகுளத்து ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்(65). இவரும், இவரது மகன் யோபேஷ் (35),யோபேஷ் மகள் அனாமிகா(எ)அம்மு(9), ஆப்ரஹாம் மகன் தாமஸ்(68), செபாஸ்டியன் மகன் ஜார்ஜ் (60) ஆகியோர் கடந்த 16ம் தேதி வயநாட்டிலிருந்து வேளாங்கண்ணி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். நேற்று சாமி தரிசனம் முடித்துவிட்டு ஊர் திரும்பினர். காரை யோபேஸ் ஓட்டி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 5.30 மணி அளவில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 3 வது கொண்டை ஊசி வளைவு அருகே கார் சென்று கொண்டு இருக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த ஜோஸ் (65) சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். மேலும் காரில் பயணம் செய்த யோபேஷ், அனாமிகா, தாமஸ் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மேட்டுப்பாளையம் போலீசார் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: