போச்சம்பள்ளியில் தொடர் மழை செங்கல் உற்பத்தி நிறுத்தம்: தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் மிகவும் தரமாக உள்ளதால் சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தினமும் லட்சக்கணக்கான செங்கல் லாரி மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். மேலும் வியாபாரிகள் நேரடியாக வந்தும் செங்கலை வாங்கி செல்வர்.

இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷண நிலை காணப்படுகிறது. மேலும் தொடர் மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. போச்சம்பள்ளியில் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், போச்சம்பள்ளி, மத்தூர், அரசம்பட்டி, பாரூர், உள்ளிட்ட  சுற்று வட்டார பகுதிகளில் செங்கல் சூளைகளில் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந் துள்ளனர். மேலும் மழையால் உற்பத்தி செய்யப்பட்ட செங்கல்களை வேக வைக்க முடியாமல் தார்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட லட்சக்கணக்கான செங்கல்கள் தேக்கமடைந்துள்ளது.

Related Stories: