காரில் கடத்தி வந்த ரூ.1 கோடி குட்கா பறிமுதல் : சிறுவன் உள்பட 6 பேர் கைது

தஞ்சை: தஞ்சையில் கடைகளுக்கு போதை பொருட்கள் விற்க காரில் போதை பொருட்களுடன் சிலர் திரிவதாக தஞ்சை சரக டிஐஜி கயல்விழிக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படையினர் தஞ்சை நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிர சோதனை நடத்தினர். அப்போது சீனிவாசபுரம் அகழி பாலம் அருகே சந்தேகப்படும்படி வந்த காரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது காரில் சோதனையில் டன் கணக்கில் குட்கா போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரிலிருந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் தஞ்சை அருகே கரந்தையை சேர்ந்த முகமது பாரூக்(35), தஞ்சையை சேர்ந்த பன்னீர்செல்வம்(40), பக்கிராம்(48), பெங்களூருவை சேர்ந்த ஓப்ரா மாலிக் மகன் பிரவின்குமார்(21), பீகார் மாநிலத்தை சேர்ந்த 17வயது சிறுவன், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சோசாராம்(41) என்பதும், அவர்கள் குட்கா பொருட்களை பெங்களூருவிலிருந்து காரில் கடத்தி வந்து தஞ்சை நகர் முழுவதும் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து காரில் மற்றும் பிருந்தவனம் பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 3 டன் போதை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: