லக்னோவுடன் கடைசிவரை போராடி கொல்கத்தா தோல்வி நான் ஆடிய மிகச்சிறந்த போட்டிகளில் இதுவும் ஒன்று: கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 66வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ முதலில் களமிறங்கியது. கேப்டன் கே.எல்.ராகுல் - குயின்டன் டிகாக் ஜோடி மிதமான ஆட்டத்தை தொடக்கத்தில் வெளிப்படுத்தினர். பின்னர் டாப் கியர் போட்டு வெளுத்து வாங்கினர். கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை தங்களது அதிரடி மூலம் பஞ்சராக்கினர். 15 ஓவருக்கு மேல் ருத்ரதாண்டவம் ஆடிய டி காக் 59 பந்தில் சதமடித்தார். 19வது ஓவரில் 3 சிக்ஸர்களும், கடைசி ஓவரில் 4 பவுண்டரிகளும் விளாசினார். ராகுல் தன் பங்கிற்கு 4 சிக்சர்களை பறக்கவிட்டார்.  ராகுல் 51 பந்தில் 68 ரன்களும், டி காக் 70 பந்தில் 140 ரன்களும் குவிக்க, லக்னோ அணி 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது. ஐபிஎல்லில் தொடக்க ஜோடி விக்கெட்டே இழக்காமல் இன்னிங்ஸை முடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதனைத்தொடர்ந்து இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் டக் அவுட்டானார். தோமரும் அவுட்டாகவே, நிதிஷ் ராணா அதிரடியில் இறங்கினார். அவர் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 29 பந்துகளில் 59 ரன்களும், சாம்பில்லிங்ஸ் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரஸல் ஆட்டத்தில் அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அவுட்டானார். இதன் பின்ர் ரிங்கு சிங் மற்றும் சுனில் நரைன் ஜோடி லக்னோவுக்கு கிலியை ஏற்படுத்தியது. இருவரும் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்றனர். ஸ்டாய்னிஸ் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ரிங்கு சிங் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார். 3 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிங்கு சிங் 2 ரன்கள் எடுத்தார். 2 பந்துக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிங்கு சிங் (15 பந்து 40 ரன்) ஆட்டமிழந்தார்.

இறுதி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஸ்டாய்னிஸ் யார்க்கர் பந்துவீசி உமேஷ் யாதவை வீழ்த்தினார். அதன்மூலம் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், ‘‘இந்த தொடரில் இதுபோன்ற ஒரு போட்டி, நடைபெறாமல் இருந்தது. கடைசி பந்து வரை வெற்றி யார் பக்கம் என்பதை நிச்சயிக்க முடியாத நிலை இந்த போட்டியில்தான் இருந்தது. கடைசி ஓவரில் இந்த நிலை இருந்திருக்கலாம். ஆனால் கடைசி பந்து வரை என்பது இப்போட்டியில்தான். வெற்றி பெற்ற அணி என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் தோல்வி அடைந்திருப்போம். அதற்கும் வாய்ப்பு இருந்தது. இது மிகச் சிறப்பான போட்டி. இரு அணிகளுமே சிறப்பாக ஆடியிருக்கின்றன. கடைசி ஓவரில் முதல் 4 பந்துகளில் 18 ரன்களை கொடுத்து விட்டு, கடைசி 2 பந்துகளை திறம்பட வீசி, அதில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி, ஸ்டாய்னிஸ் சாதித்து விட்டார். கொல்கத்தா அணி வலுவான அணி என்பது தெரியும்.

இந்த அளவுக்கு கடைசி பந்து வரை போராடுவார்கள் என்பதையும் எதிர்பார்த்தேன். குவின்டன் டி காக், மிகவும் அபாரமாக ஆடி ரன்களை குவித்தார். அவர் ஆடிக் கொண்டிருந்த போது, குறிப்பாக கடைசி ஓவர்களில் மறுமுனையில் நின்று, நான் வெறும் பார்வையாளராகத்தான் இருந்தேன். இத்தொடரில் எங்களது கடைசி போட்டியை இப்படி முடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி’’ என்று தெரிவித்தார்.  கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறுகையில், ‘‘நான் வருத்தப்படவில்லை. கிரிக்கெட்டில் நான் ஆடிய மிகச் சிறந்த போட்டிகளில் இதுவும் ஒன்று. எங்களது விளையாட்டுத் திறன் வெளிப்பட்ட விதம் அருமை. ரிங்கு கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்றது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகப்பெரிய இலக்கை நம்ப முடியாத வகையில் துரத்தி வந்து, கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி என்ற நிலையில் எதிர்பாராதவிதமாக ரிங்கு ஆட்டமிழந்து விட்டார். அதுதான் வருத்தம். இந்தப் போட்டியில் அவரால் வெற்றி கிடைக்கப் போகிறது. பெரிய ஹீரோவாக கொண்டாடப்பட போகிறார் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனாலும் அவர் ஆடியது அற்புதமான இன்னிங்ஸ். அதில் எனக்கு மகிழ்ச்சிதான்’’ என்றார்.

சதத்தை கொண்டாட முடியாமல் செய்துவிட்டார்கள்

ஆட்டநாயகனாக தேர்வான குவின்டான் டி காக்  கூறுகையில், ‘‘சதம் அடித்து, அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்று தந்தேன் என்பதில்  மகிழ்ச்சிதான். ஆனால் கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாக ஆடி, எனது சதத்தை  கொண்டாட விடாமல் செய்துவிட்டார்கள். கடைசி ஓவரை வீசிய ஸ்டாய்னிஸ், முதல் 4  பந்துகளில் 18 ரன்கள் கொடுத்தார். போட்டி கையை விட்டு நழுவி விட்டது  என்றுதான் அப்போது நினைத்தேன். ஆனால் 5வது பந்தில் அந்த அற்புதமான கேட்ச்,  திருப்புமுனையாக இருந்தது. கேட்ச்கள்தான் போட்டிகளுக்கு வெற்றிகளை தரும்  என்பது உண்மைதான்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: