ரூ.1 கோடி பாக்கி பிரச்னையில் பயங்கரம் கிராமத்துக்கு வரவழைத்து நெல் வியாபாரி கொலை: மற்றொரு வியாபாரி கைது

மதுராந்தகம்: நெல் வியாபாரத்தில் ஒரு கோடி பாக்கி பிரச்னையில் வியாபாரியை கிராமத்துக்கு வரவழைத்து கழுத்தை நெரித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒரத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40). நெல் வியாபாரியான இவர்,  தனது பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல் மூட்டைகளை நெல்லை மாவட்டம் கல்லிைடக்குறிச்சி மடவிளாகம் தெருவைச்  சேர்ந்த பட்டுராஜ் (55) என்பவருக்கு மொத்தமாக விற்பனை செய்துவந்துள்ளார். முதலில் சப்ளை செய்த நெல் மூட்டைகளுக்கு ஒழுங்காக பணத்தை கொடுத்துவந்த பட்டுராஜ், பின்னர் பணத்தை சரிவர கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக, ரமேசுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பாக்கிவைத்துள்ளார்.

இதையடுத்து, ரமேஷ் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தரவேண்டும் என்று பட்டுராஜிக்கு நெருக்கடி கொடுத்துவந்ததாக தெரிகிறது. இருப்பினும் பணத்தை கொடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. அத்துடன் பொறுப்பற்ற முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரமேஷ் செல்போனில் நைசாக பேசி பட்டுராஜை தனது கிராமத்துக்கு நேற்று வரவழைத்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் ஒரத்தி அருகே உள்ள ஆனந்தமங்கலம் கிராமத்தில் உள்ள சமணர் குன்று பகுதியில் அமர்ந்து பண பிரச்னை பற்றி பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென அவர்கள் இடையே  வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது ரமேஷ் தான் வைத்திருந்த டவலால் பட்டுராஜின் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக தெரிகிறது.

இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, ஒரத்தி போலீசார் சென்று பட்டுராஜின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அங்கு பதுங்கியிருந்த ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துவந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, நெல்லை நெல் வியாபாரி கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல்  பரவி வருகிறது.

Related Stories: