ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை 18%ல் இருந்து 28% ஆக உயர்த்த ஒன்றிய அரசு திட்டம்!!

டெல்லி : ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ, குதிரைப் பந்தயம் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை 18%ல் இருந்து 28% ஆக உயர்த்த ஒன்றிய அரசின் அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குதிரைப் பந்தயம், கேசினோ உள்ளிட்ட கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் கிரிக்கெட், போக்கர், ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தற்போது சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆக உள்ளது.

இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டு வருவாய்க்கான  வரியை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்து மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை ரேஸ், கசினோ போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு டெல்லியில் ஆலோசனை நடத்தியது. தற்போது இந்த குழுவினரின் பரிந்துரையின் அடிப்படையில், 18% ஆக உள்ள ஜிஎஸ்டியை 28% ஆக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மதிப்பீடு முறையையும் இறுதி செய்யப்பட்டுள்ள அறிக்கையையும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கேமிங் உட்பட சில விளையாட்டுகளுக்கு 28 சதவீதமாக ஜிஎஸ்டி வரி உயரும் போது, அவற்றில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: