×

கயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்... கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில் முனைவோர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 5 தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தியுள்ளோம்.பல்வேறு தொழில்களின் மையமாக விளங்குகிறது கோவை. தகவல் தொழில்நுட்பத்துறையிலும் கோவை வேகமாக வளர்ந்து வருகிறது. கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை. ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை.

சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக கோவை திகழ்கிறது; அரசின் லட்சியத்தை அடைய கோவை மாவட்டத்தின் பங்களிப்பு முக்கியம்.கோவை மாநகருக்கான மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும்.திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ. 69,000 கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தெற்கு ஆசியாவிலேயே முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என செயலாற்றுகிறோம். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அறிவுசார் பூங்கா அமைக்கப்படும்.

கயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கயிறு வணிக மேம்பாட்டு மையம் கோவையில் அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.3.5 கோடியில் மஞ்சள் தூள் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் செய்வதற்கான உற்பத்தி மையம் அமைக்கப்படும்.கோவைக்கான பெருநகர வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும். 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பட்டறைகள் உருவாக்கப்படும்.சிப் எனப்படும் செமி கண்டக்டர் உற்பத்தியில் கோவை தொழில்துறையின் கவனம் செலுத்த வேண்டும்.பருத்தி, நூல் விலையை குறைக்க ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,என்றார்.


Tags : Tamil Nadu ,Rope Business Development Centre ,CM K. stalin , Rope, Production, Tamil Nadu, Coimbatore, Chief Minister, MK Stalin
× RELATED தமிழ்நாட்டில் சிஏஏவை அமல்படுத்த...