×

ஈரோடு அருகே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான திருவிழா: இஸ்லாமியருக்கு சிலை வைத்து வழிபடும் இந்துக்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, மூதாதையருக்கு உதவிய இஸ்லாமியாருக்கு கோவில் கட்டி அவரை குலதெய்வமாக கிராமத்து இந்துகள் வழிபடுகின்றனர். சிவகிரி அருகே உள்ள காகம் கிராமத்தில் பழமையான ராவுத்தர் குமாரசாமி கோவில் உள்ளது. இப்பகுதி இந்துக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோவிலில் சுருட்டு புகைத்தபடி, லுங்கி அணிந்து, சாய்ந்த நிலையில் வீற்றிருக்கும் ராவுத்தர் சிலை உள்ளது. இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா, செவ்வாய் கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று இரவு அடைக்கலம் சென்று, சக்தி அழைத்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது படையல் பொருட்களுடன் ஊர்வலமாக சுவாமியை அழைத்து வந்தனர். பின்னர் செங்கரும்பு பந்தலில் மண்ணால் செய்யப்பட்ட ராவுத்தர் சாமிக்கு  கண்திறப்பும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. அதன்பின் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட மதுபானம், சுருட்டு வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மதுபானங்களை பாட்டில், பாட்டில்களாக ஊற்றி தீப ஆராதனையும் நடத்தப்பட்டது. அப்போது பூஜை செய்தவர் உட்பட பலரும் அருள் வந்து ஆடினர். புலம்பெயர்ந்து வந்த தங்களின் மூதாதையர்களுக்கு இப்பகுதி இஸ்லாமியர் உதவிகரமாக இருந்ததாகவும், அவரது மறைவிற்கு பின்னர் சிலை அமைத்து குல தெய்வமாக வழிபாடு நடத்தி, நன்றி கடன் செலுத்துவதாகவும் அக்கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த கோவில் சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.          


Tags : Erode ,Islam , Erode, Religious Reconciliation, Festival, Islamists, Idol, Hindus
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் 48...