கர்நாடகாவில் கொட்டித்தீர்த்த கனமழை காவிரியில் 30,000கனஅடி நீர்வரத்து: மேட்டூர் அணை 10 நாளில் நிரம்ப வாய்ப்பு

பென்னாகரம்: கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை துவங்கி விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக பெங்களூருவில் 100 மி.மீ., மழை பதிவானது. இந்த மழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 25,000 கனஅடியாகவும், பிற்பகல் 3 மணியளவில் 30 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இதனால் அங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதையடுத்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் மெயினருவியில் குளிப்பதற்கும், காவிரியில் பரிசல் இயக்குவதற்கும் தடை விதித்துள்ளார். இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 8,030 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை மேட்டூர் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கனஅடி திறக்கப்படுகிறது. திறப்பை காட்டிலும், வரத்து அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த 15ம் தேதி காலை 108.14 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று காலை 109.45 அடியாக உயர்ந்தது. அதன்படி, கடந்த 3 நாளில் நீர்மட்டம் 1.31 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 77.63 டிஎம்சியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 16 டி.எம்.சி தண்ணீர் தேவை. நீர்வரத்தும், திறப்பும் இதே அளவில் இருந்தால், இன்னும் 10 நாளில் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. கடந்தாண்டு நவம்பர்  13ம் தேதி, மேட்டூர் அணை நிரம்பி, முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஆண்டில் முன்கூட்டியே மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் மேட்டூர் அணை மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மண்சரிவால் அந்தரத்தில்  தொங்கும் வீடுகள்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மண் இலகு தன்மையுள்ள இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வேடன் வயல் மற்றும் தட்ட கொல்லி காலனி குடியிருப்புகளில் மழை காரணமாக பலரின் வீடுகளை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டு, அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இடியுடன் விடிய விடிய கனமழை பெய்தது.   ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில்  வெள்ளம் புகுந்தது.

குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை

குற்றாலத்தில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மே மாதம் 2வது வாரத்தில் சீசன் துவங்கியது. நேற்று பகல் முழுவதும் அங்கு வெயில் இல்லை. அவ்வப்போது சாரல் பெய்து கொண்டே இருந்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மதியம் மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி மதியம் முதல் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Related Stories: