நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு

புதுடெல்லி: பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திமுக எம்பிக்கள் குழு மனு கொடுத்தனர். கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து வருகிறது. இம்மாதம் கிலோ ரூ.40 வரையில் விலை உயர்ந்து ரூ.470 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருக்கும் பின்னலாடைத் தொழிலாளர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக கடிதம் எழுதினார்.

அதைத் தொடர்ந்து, திமுக எம்பி. கனிமொழி தலைமையில், எம்பிக்கள் சின்ராஜ், ஜோதிமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், கே.சண்முக சுந்தரம் ஆகியோர் கொண்ட குழு டெல்லி நிதி அமைச்சகத்தில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்துள்ளனர். அந்த மனுவில், ‘கிரஷ் கிரெடிட் லிமிட்டை மூன்று மாதங்களுக்கு தரும் நிலையில் அதனை  எட்டு மாதங்களுக்கு வழங்க வேண்டும். இதனால் தொழில்முனைவோர்  பயன்பெறுவார்கள். வங்கிகளில் கடன் தருவதற்கு வழங்கப்படும் விளிம்பு தொகை  27 சதவீதமாக உள்ள நிலையில், அதனை 10 ஆக குறைத்து கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 30ம் தேதி வரை  இறக்குமதிக்கான வரி இல்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதனை  செப்டம்பர் வரையில் கையெழுத்தாக உள்ள அனைத்து ஒப்பந்தத்திற்கு  பொருந்தக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்றுமதியை குறைத்து  இந்தியாவில் உள்ள ஆலைகளுக்கு போதிய காட்டன் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர், திமுக எம்பி கனிமொழி அளித்த பேட்டியில், ‘‘நூல் விலையேற்றத்தால் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடை தொழில் முடங்கியுள்ளது. விவசாயத்திற்கு அடுத்ததாக ஜவுளி நிறுவனம் அதிக வேலை வாய்ப்புகளை தரும் தொழில் ஆகும். பருத்தி நூல் விலை உயர்வு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்படும் சூழல் உருவாகி உள்ளது என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தின் வாயிலாக தெரிவித்து இருந்தார். அந்த கடிதத்தின் நகலை இன்று(நேற்று) ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வழங்கினோம். மேலும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எங்களது அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக பரிசீலனை செய்வதாக தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுதொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்’’ என்றார்.

Related Stories: