அற்புதம்... அம்மா..!ஒரு தாயின் 31 ஆண்டு கண்ணீர் போராட்டம்

இந்திய நவீன சிவில் சமூகம் மறக்கவே முடியாத ஒரு மாபெரும் சரித்திரப் போராட்டத்தை தனி ஒரு மனுஷியாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் அற்புதம்மாள். பேரறிவாளனின் தாய். ஒரு தாயின் கண்ணீர் பத்து மாதம் என்று சொல்வார்கள். அற்புதம்மாளோ பேரறிவாளன் என்ற தன் மகனை வயிற்றில் சுமந்த வலி பத்து மாதம் என்றால், சட்டத்திடமிருந்தும் அரசியல் சூழ்ச்சிகளிடமிருந்தும் அவரைக் காப்பாற்ற தன் மனதில் சுமந்தது ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தொரு ஆண்டுகள்.  

புராணங்களிலும் இதிகாசங்களிலும் தன் கணவனைக் காப்பாற்ற எமனோடு போராடிய பெண்மணிகளையும் தன் குழந்தைக்காக வனவிலங்குகளோடு போராடியவர்களையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்படி ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை, வைராக்கியம் மிகுந்த போர்குணத்தை, நீதி கேட்டு இந்தியப் பேரசின் மனசாட்சியையே உலுக்கிய மானமிகு போராட்டத்தை நிகழ்த்திய ஒரு தாயை இப்போதுதான் இந்திய வரலாறு பார்க்கிறது. அதனால்தான் இந்த வழக்கும் பேரறிவாளனும் அற்புதம்மாளும் மிக முக்கியமான வியத்தகு நிகழ்வென ஆகிறார்கள்.   

  ஒரு பத்தொன்பது வயது இளைஞனின் வீட்டுக்குக் காவல்துறை வருகிறது. இதோ அனுப்பிவிடுவோம். எளிமையான விசாரணைதான் என்று சொல்லி அழைத்துச் செல்கிறார்கள். மடியில் கணமிருந்தால்தானே வழியில் பயமிருக்கும் என்ற எளிமையான அறம் சார்ந்த எண்ணத்திலும் நம் நாட்டின் நீதி பரிபாலனங்கள், நவீன அரசியல் அமைபுகள் மீதான நம்பிக்கையோடும் தன் மகனை அனுப்பி வைக்கிறார் அற்புதம்மாள். அப்போது போனவர் போனதுதான். திரும்பவே சாத்தியமில்லாத மாபெரும் இருள் குகை ஒன்றில் தன் மகனை அனுப்பி வைக்கிறோம் என்று அற்புதம்மாள் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். ஒரு பெருந் தேசியத்தின் உடைக்கவே இயலா கடும் சட்டங்களும் அதிகாரத்தின் வலுவான புஜங்களும் அரசியல் சூழ்ச்சிகளும் சமூகத்தின் எண்ணற்ற கொடுவிசைகளும் இணைந்து தன் மகனை தன்னிடம் நெருங்கவே இயலாத ஒரு புதிர் சுழலுக்குள் தள்ளிவிடும் என்று அந்த எளிய தாய் நினைத்திருக்க சாத்தியமில்லைதான்.  

மே 21, 1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி என்ற மாபெரும் தலைவன் படுகொலை செய்யப்படுகிறார் என்று சொன்னால், அந்த துயரார்ந்த சம்பவம் நடந்த இருபதே நாளில் பேரறிவாளன் என்ற இளைஞனுக்கு நடந்ததோ ஒரு கதாபாத்திர படுகொலை. நல்ல கல்வியுடன் சமூகத்துக்கு உழைக்கும் நல்ல நோக்கத்துடன் கண் நிறைய கனவுகளோடு இருந்த ஓர் இளைஞனை, ஒரு தேசத் துரோகக் குற்ற வழக்கில், அதுவும் அந்நாட்டின் பிரதமராய் இருந்த ஒரு தலைவனைக் கொன்ற வழக்கில் தவறாக சேர்த்துவிட்டு, தீரவே தீராத பழி பாவம் ஒன்றை அந்த இளைஞர் மேல் சுமத்தியது கதாபாத்திர படுகொலைதான்.

  பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளுக்கோ அன்று நடந்தது ஒரு நம்பிக்கையின் படுகொலை. நம் மகனை ஒன்று செய்ய மாட்டார்கள். நம் மீதுதான் தவறு இல்லையே என்ற நீதி மீதும் சட்டத்தின் மீதும் பெரு நம்பிக்கை கொண்ட ஒரு தாயின் நம்பிக்கை மீதான படுகொலை. பேரறிவாளன் கைதாகிறார். யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு தேசத்தின் தலைமகனை கொன்ற வழக்கில் கைதாகி உள்ளே சென்ற ஒருவருக்காக யார்தான் என்ன செய்ய இயலும்? ஆனால், அற்புதம்மாள் மட்டும் மனம் தளரவேயில்லை. ஒரு நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை கையிலெடுக்கிறார். உண்மையில் இந்தப் போராட்டத்தைத் தொடங்கும்போது அந்த அன்னைக்குத் தெரிந்திருக்காதுதான், இது இவ்வளவு நெடியதொரு படுகளமாய் இருக்குமென்றும் இந்தியா எனும் பெரிய தேசத்தின் அத்தனை அதிகார மையங்களுக்கு எதிராகவும் தான் போராட வேண்டியதிருக்கும் என்றும் அற்புதம்மாள் எதிர்பார்த்திருக்க மாட்டார்தான்.  

மறுபுறம் அரசுமேகூட இதனை எதிர்பார்த்திருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். மரித்த தன் கன்றுக்காக நீதி கேட்டு அரண்மனையின் ஆராய்ச்சி மணியை ஒலிக்கச் செய்த தாய் போல், தூக்கு மேடையின் வாசலில் நின்றிருந்த தன் மகனுக்காக ஓர் எளிய தாய் வந்து சட்டத்தின் முன் நிற்பார் என்றோ, இவ்வளவு பெரிய சட்டப் போராட்டதை கொஞ்சமும் மனம் தளராமல் இத்தனை ஆண்டுகள் முன்னெடுப்பார் என்றோ அரசுத் தரப்புமேகூட எதிர்பார்த்திருக்காது. ‘தேரா மன்னா செப்புவது உடையேன்’ என்று கண்ணகியும் ஒருமுறை நீதி கேட்டு நின்ற அன்னைதான். அவரின் கேள்வியிலும்கூட நீதியிருந்ததுதான். ஆனால் அவரிடம் ஆவேசம் இருந்தது, கோபம் கொதிநிலையில் இருந்தது. அற்புதம்மாளோ ஆவேசம் இல்லாத அமைதியோடும் தர்க்கத் திறனோடும் தன் நீதிக்கான குரலை முன்னெடுத்தார்.

  பேரறிவாளன் வழக்கில் அற்புதம்மாளுக்குக் கிடைத்த வெற்றியை இன்று ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் கொண்டாடுகிறது. ஒருவகையில் இதுதான் அவரின் உண்மையான வெற்றி. ஆனால், இந்த வெற்றியை அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டார்.  அதாவது, பேரறிவாளன் வழக்கில் இந்திய-தமிழ் சிவில் சமூகத்தின் மனசாட்சியை தொட்டு உலுக்கியதுதான் அற்புதம்மாளுக்கும் பேரறிவாளனுக்கும் இவ்வளவு முக்கியமான நீதி கிடைக்க முதன்மைக் காரணம். ஒருபுறம் அற்புதம்மாள் என்ற நீதி கேட்டு நிற்கும் தாயும் அவரது பாவப்பட்ட மகனும் இருக்கிறார்கள். மறுபுறம் தடா சட்டம், காவல்துறை, சிபிஐ, உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம், அரசின் அத்தனை நிர்வாக அலகுகளும் நிற்கின்றன.  இத்தனையையும் ஒற்றைத் தாயாய் எதிர்கொண்டார் அற்புதம்மாள்.  

முப்பத்தொரு ஆண்டுகளாக அற்புதம்மாள் ஏறாத படியில்லை. அதிகாரத்தின் அத்தனை வாசல்களிலும் கண்ணீர் மல்க நின்றார். மனு எழுதி மனு எழுதி விரல்கள் தேய்ந்திருக்கும். ஒருமுறை அற்புதம்மாள் சொன்னார். ’எனக்கு செருப்பு சீக்கிரம் தேய்ஞ்சிடும். அடிக்கடி புது செருப்பு வாங்கிட்டே இருப்பேன்’ என்றார். நடந்து நடந்து செருப்பு தேஞ்சிடுச்சு என்று நாம் சொலவடையாகத்தான் சொல்வோம். அற்புதம்மாள்தான் அதன் உதாரணம். கலெக்டர் அலுவலகத்தின் குறை தீர்க்கும் முகாம்கள், முதலமைச்சரின் குறை கேட்பு அலுவலகம், கவர்னர், ஜனாதிபதியின் அலுவலக குறை கேட்பு அலுவலகங்கள் என அற்புதம்மாள் கால் படாத இடமே இல்லை.

  சென்னைக்கும் டெல்லிக்கும் ஓடிக்கொண்டே இருந்தார். வேலூர், சென்னை சிறைச்சாலைகளுக்கு மகனைப் பார்க்க ஓடுவதும், முதல்வரைச் சந்திக்க சென்னை ஓடுவதும், ஜனாதிபதியைச் சந்திக்க டெல்லிக்குப் போவதுமாய் அவர்கள் கால்கள் ஓய்வையே காணவில்லை. ஏதேனும் ஒரு சிற்றூரில் ஒரு சின்ன அமைப்பு தூக்கு தண்டனைக்கு எதிராய் ஒரு கருத்தரங்கு நடத்தினாலோ, அறப்போராட்டம் நடத்தினாலே, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலைக்கு ஆதரவாய் போராட்டம் நடத்தினாலோ அங்கே முதல் ஆளாய் நிற்பார்.

தமிழகத்துக்கு பிரதமரோ, ஜனாதிபதி, மத்திய அமைச்சர்களோ, முக்கிய எதிர்கட்சித் தலைவர்களோ யார் வந்தாலும் மனுவோடு போய் நின்று மன்றாடுவார்.  

முதல்வர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊடகத்தினர் என யாரைப் பார்த்தாலும் அவரின் ஒரே கோரிக்கை பேரறிவாளன் விடுதலை பற்றியதாய்த்தான் இருந்தது. தூக்கு தண்டனை கிட்டதட்ட முடிவாகிவிட்டது என்ற சூழ்நிலையில் செங்கொடியின் மரணம் தமிழகத்தையே உலுக்கியது. இது அற்புதம்மாளையும் விசைகொண்டு இயங்கச் செய்தது. கிட்டதட்ட, தமிழகத்தின் அத்தனை பேர் மனசாட்சியும் உலுக்கப்பட்டது அந்த நிகழ்வுக்குப் பிறகுதான். சிபிஐ அதிகாரி வி.தியாகராஜன், ’பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தில் அவர் ராஜிவைக் கொல்லத்தான் பேட்டரி வாங்கிக்கொடுத்தார் எனச் சொல்லப்படவில்லை. வழக்கை வலுவாக்க பிற்பாடு சேர்க்கப்பட்டது’ எனச் சொன்னது இன்னொரு திருப்பு முனை.

  செய்யாத குற்றத்துக்காக இத்தனை ஆண்டு காலம் ஒருவர் சிறையில் வாடுகிறார் என்ற பரிவுணர்ச்சி உருவானது. தாமதிக்கப்பட்ட நீதி அநீதியே என்பார்கள். பேரறிவாளன் விஷயத்தில் அது நடக்கக் கூடாது என்ற மனநிலை ஆளும் தரப்பு உட்பட சமூகத்தின் அத்தனை தூண்களுக்கும் உருவானது. இதுதான் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் நிகழ்த்திய அற்புதம். ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் தன் அறமார்ந்த கண்ணீர் குரலால் கவனிக்க வைக்க முடியும் என்பதை அற்புதம்மாள் நிரூபித்திருக்கிறார். இந்திய வரலாற்றில் இத்தனை நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு லட்சியத் தாயாக இன்று உருவெடுத்திருக்கிறார் அற்புதம்மாள்.

Related Stories: