நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு டவுன் காவல் நிலையம் எதிரே கடந்த தலைமுறைகளாக காய்கறி வியாபாரம் செய்யும் நடைபாதை கடைகளை, கடந்த 13ம் தேதி, நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அகற்றப்பட்ட வியாபாரிகளுக்கு மாற்று இடம் அளிக்கப்பட்டது. இதற்காக, பழைய விருந்தினர் மாளிகையை இடித்து உழவர்சந்தை கடைகளோடு இணைத்து கழிப்பறை, குடிநீர் வசதி, லாரிகள் உள்ளே சென்று காய்கறிகளை இறக்குவதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளையும் நகராட்சி சார்பில் செய்துள்ளனர். ஆனால், நடைபாதை வியாபாரிகள் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்து,  பழைய இடத்தில் மீண்டும் கடைகளை அமைத்துள்ளனர்.

இதைதொடர்ந்து, நடைபாதை கடைகளை அகற்றுவது குறித்து நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி  தலைமையில், நகர்மன்ற தலைவர் தோன்மொழி நரேந்திரன் ஆகியோர் வியாபாரிகளுடன் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகள், கடைகளை மாற்றி அமைத்தால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாங்கள், தீக்குளித்து தற்கொலை செய்வோம் என கூறி அதிகாரிகளுடன்  கடும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார், அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், புதிய இடத்துக்கு செல்லுங்கள். உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். கலெக்டரின் உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீங்கள் புதிய இடத்துக்கு கட்டாயம் செல்லவேண்டும் என உறுதியாக கூறினர். இதனால், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. வியாபாரிகள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, கடைகளை காலி செய்வதற்கான காலகெடு அறிவிக்கவில்லை.  நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான நேரத்தையும் குறிப்பிடவில்லை.

Related Stories: