மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை சட்ட விதிகளை மீறிய ஆளுநர் உச்ச நீதிமன்றம் கண்டனம்

சென்னை: ‘மாநில அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே ஆளுநர் வேலை. அதில் காலதாமதப்படுத்தியது அரசியலமைப்புக்கு எதிரானது’ என பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய விஷயங்கள்: பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது அரசியலமைப்புச் சட்டப்படி தவறானது. முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. மாநில அரசு ஒரு முடிவெடுத்து, அதை ஆளுநருக்கு அனுப்பிவைத்தால் அதற்கு ஒப்புதல் அளிப்பது மட்டும்தான் ஆளுநரின் வேலை. அதில் தன்னுடைய சொந்தக் கருத்துகளையோ அல்லது அவர் தனது சொந்த முடிவையோ எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது.

கருணை மனுக்கள், சட்டப்பேரவை தீர்மானத்தின் மீதான முடிவுகளை ஆளுநர்கள் எடுப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், ஆளுநர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இரண்டரை ஆண்டுகள் கால தாமதப்படுத்தியது தவறு. இது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பதாகும். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை. மாநில அரசின் முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட்டவர்தான். இனி யாரும் அதை மறுக்க முடியாது. ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. ஒரு மாநிலத்தின் ஆளுநரே என்றாலும், சட்டவிதிகளுக்கு பொருந்தக்கூடியவராகவே இருப்பதே அடிப்படை அம்சம்.

161வது அரசியல் சாசன விதியின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநர் அனைத்து சட்டவிதிகளையும் மீறியிருப்பது தெளிவாகத் தெரியவருகிறது. மேலும், மாநில அமைச்சரவை தீர்மானத்தில் தலையிட ஒன்றிய அரசுக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம், மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும், மேலும் உறுதியாகி இருக்கிறது. இது, தமிழ்நாடு அரசால் இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால் இந்த தீர்ப்பு ஆளுநரின் அதிகார வரம்பை நிர்ணயிக்கக் கூடிய வரலாற்று சிறப்புமிக்க உத்தரவாக கருதப்படுகிறது.

Related Stories: