தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த 3000 பக்க விசாரணை ஆணைய அறிக்கை முதல்வரிடம் ஒப்படைப்பு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு  சம்பவம் தொடர்பான 3,000 பக்கங்கள் கொண்ட விசாரணை ஆணைய அறிக்கை முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையை, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து அளித்தார்.

முதல்வருடனான சந்திப்பு குறித்து சென்னை பசுமை வழி சாலையில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பொறுத்தவரை விசாரணை வெளிப்படையாகவும், அதே நேரத்தில் ரகசியத் தன்மை கொண்டதாகவும் இருந்தது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்ததனர்.துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 5 பாகங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ளேன். இந்த அறிக்கை மொத்தம் 3000 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. இந்த அறிக்கையின் முதல் இரண்டு பாகங்கள் சம்பவம் தொடர்பானவை இடம்பெற்றுள்ளது. 3வது பாகத்தில் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4வது பாகத்தில், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை. நடைபெறாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அறிக்கையின் 5ம் பாகத்தில் 1500 வீடியோ ஆவணங்கள் மற்றும் 1250 சாட்சிகள், 1500 காவல்துறையினரிடம் விசாரணை நடத்தப்பட்டது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளோம். நடிகர் ரஜினிகாந்த் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரிடம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டபோது தனக்கு இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை எதுவும் தெரியாது எனவும், தொலைக்காட்சியை பார்க்க வில்லை எனவும், உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களை தெரிவித்து விட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பேரணி போன்றவற்றில் ஈடுபடும் போது பொதுமக்கள் என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: