சென்னை தலைமை செயலகத்தில் 6 திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி முதல்வர் ஆய்வு: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் 6 திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை: நான் முதலமைச்சர் - 33 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதனால் எங்களால்  மட்டுமே அனைத்தும் செயல்படுகிறது என்று நான் சொல்ல மாட்டேன், சொல்லவும் கூடாது.

பலரது சிந்தனையின் கூட்டுச் சேர்க்கைதான் அரசு. அப்படிச் செயல்பட்டால்தான் அது மக்கள் அரசாக இருக்க முடியும். அந்த வகையில் பல்வேறு ஆலோசனைக் குழுக்களை அமைத்து அவர்களது ஆலோசனைகளைப் பெற்று செயல்பட்டு வருகிறோம். அந்த அடிப்படையில்தான் இந்தக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அரசினுடைய பல்வேறு நலத்திட்டங்கள், அது ஒன்றிய அரசின் திட்டமாக இருந்தாலும் சரி, மாநில அரசினுடைய திட்டமாக இருந்தாலும், அந்தத் திட்டத்தின் பலன் கடைக்கோடி மனிதரையும் சேரும்படி செயல்பட வேண்டும். அதுதான் நம்முடைய நோக்கமாக அமைந்திருக்கிறது.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே நம்முடைய அரசினுடைய நோக்கமாக இருக்கிறது.  எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சொன்னால், எல்லாத் துறைகளும் ஒன்று போல முன்னேற்றம் காண வேண்டும். மருத்துவம், கல்வி, இளைஞர் நலன், வேளாண் மேலாண்மை, பெருந்தொழில்கள், நடுத்தர - சிறு -குறு தொழில்கள், நெசவாளர் மற்றும் மீனவர் நலன் என சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்குமான தேவைகளை அறிந்து திட்டங்களை வகுத்து மாநில அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கோட்டையில் தீட்டப்படக்கூடிய திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்று சேர, சீரான ஒரு ஒருங்கிணைப்பு அவசியம் தேவை. திட்டங்கள் தீட்டுவதை விட முக்கியமானது அந்தத் திட்டங்கள், அதனுடைய பயன்கள், அதனுடைய நோக்கம் சிதையாமல் நிறைவேற்றுவதுதான். அதுதான் நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. அந்தச் சவாலை எதிர்கொள்வதற்காகத்தான் இது போன்ற ஆலோசனைக் குழுக்கள் அவசியமாகிறது. ஒன்றிய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படக்கூடிய 41 திட்டங்களை மாநில மற்றும் மாவட்ட அளவிலான திசா கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய வேண்டும். இன்று நாம் ஆய்வுக்கு எடுத்திருக்கக்கூடிய 6 திட்டங்களின் செயல்பாடுகளைப் பற்றி உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் - முதலாவது ஆகும். கிராமப்புற குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதை உறுதி செய்து, தனிநபர் மற்றும் ஊரக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தினுடைய நோக்கம்.  

2. ஏழை, எளிய மகளிரைக் கொண்டு சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு நிதி உள்ளிட்ட சேவைகளை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, குடும்ப வருமானத்தை உயர்த்தும் உயர்ந்த நோக்கத்துடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. 2021-22ம் ஆண்டில் மட்டும் புதியதாக 32ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கி அதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வங்கிகளால் நடத்தப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மூலம் 15 ஆயிரத்து 736 பெண்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு, 13 ஆயிரத்து 69 மகளிர் வங்கிக் கடன் பெற்று சுயதொழில் செய்கிறார்கள்.

3. இல்லம்தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் இந்த அரசால் ‘ஜல் ஜீவன்’ இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2021-22ம் ஆண்டில் ரூபாய் 1,156 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 14 லட்சத்து 54 ஆயிரத்து 569 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.

4. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் ‘அனைவருக்கும் கல்வி’ மற்றும் ‘ஆசிரியர் கல்வி’ ஆகிய திட்டங்கள்  - ஒன்றிய, மாநில அரசு நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை மூலம் மாணவர் நலனுக்காக ‘நான் முதல்வன்’, ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’, கற்றல் கற்பித்தலின் தரத்தை மேம்படுத்த மதிப்பீட்டுப் புலம் போன்ற சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5. உழவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு, வேளாண்மையை லாபகரமான தொழிலாக மாற்றிடும் நோக்கத்துடன் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், ஒன்றிய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட மதிப்புக் கூட்டுதலுடன் கூடிய உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்துவது, விவசாயம் சார்ந்த புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது, ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட வழிவகுப்பது போன்றவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

6. இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறக்கூடிய வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2021-22-ம் ஆண்டில் 4 ஆயிரத்து 634 இளைஞர்களுக்கு ரூபாய் 49 கோடியே 25 லட்சம் செலவில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு பெற தகுதியுடையவர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நாம் இப்போது ஆலோசனைகள் செய்ய இருக்கிறோம். இது போன்ற ஆய்வுக் கூட்டங்களின் மூலமாக  ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் நிலையான வளர்ச்சியையும், சமூகநீதியையும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அனைவருக்கும் உறுதி செய்வோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளின் டி.ஆர்.பாலு, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஆர்.எஸ்.பாரதி, ரவீந்திரநாத் மற்றும் எம்எல்ஏக்கள் செங்கோட்டையன், ஹசன் ஆரூன் உள்ளிட்ட பல்வேறு எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: