விசாவுக்காக சீனர்களிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் அதிரடி கைது: லண்டனில் இருந்து திரும்பி வந்ததும் கைதாவாரா?

சென்னை: சீனர்கள் 263 பேருக்கு சட்ட விரோதமாக விசா பெற்று தர ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராகும் படி சிபிஐ சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் ெவளியாகி உள்ளது. இதனால் அவரும் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை ஒன்றிய நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் ப.சிதம்பரம் ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்தபோது, பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியில் 1980 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டிருந்தது. இந்த அனல் மின் நிலையத்தின் கட்டுமான பணியின் ஒரு பகுதியை அந்த தனியார் நிறுவனம், சீனா நாட்டின் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியது. பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் சீன நாட்டில் இருந்து 263 தொழில் நுட்ப நிபுணர்களை அழைத்து வர சீன நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், இந்திய சட்ட விதிகளின் படி ஒரே நேரத்தில் 263 பேரை அதுவும் சீனா நாட்டில் இருந்து அழைத்து வர முடியாது. அதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சட்ட விதிகள் பெரிய தடையாக இருந்தது.

இதனால் அனல் மின் நிலையம் அமைக்கும் தனியார் நிறுவனம் மற்றும் சீன நிறுவனம் பிரதிநிதிகள் 263 பேரை ஒரே நேரத்தில் இந்தியாவிற்கு அழைத்து வர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்போது தான் சென்னையில் ஆடிட்டராக உள்ள பாஸ்கர் ராமன் மூலம் 263 சீனர்களை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆடிட்டர் பாஸ்கர் ராமன் அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டராகவும்  நெருங்கிய நண்பராகவும் இருந்தார். இதனால் 263 சீனர்களுக்கு இந்திய விசா பெற்று தர ஆடிட்டர், கார்த்தி சிதம்பரம் உதவியை நாடினார்.

இதற்காக மான்சா பகுதியில் உள்ள அனல் மின் நிலையத்தின் கட்டுமான பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனம் ரூ.50 லட்சம் பணம் லஞ்சமாக கொடுக்க முன்வந்தது. அதை தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் உதவியுடன் ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு சீனர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டு சலுகைகள் வழங்கப்பட்டது. அந்த சலுகையின் படி 263 சீனர்கள் இந்தியாவில் தங்கி வேலை செய்ய தடையில்லா விசா வழங்கப்பட்டது. இதற்காக மான்சாவில் உள்ள தனியார் நிறுவனம் ரூ.50 லட்சம் பணத்தை ஒரே தவணையாக மும்பையில் உள்ள பெல் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த பணம் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் அனைத்தும், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக ரூ.305 கோடி பணம் பெற்ற விவகாரத்தில் சிபிஐ முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், நிறுவனங்களில் நடத்திய சோதனையின் போது ஆவணங்களாக கிடைத்தது. அந்த ஆவணங்களின் படி சிபிஐ அதிகாரிகள் முழு விசாரணை நடத்தினர். அதில், கடந்த 2010-2014ம் ஆண்டு காலத்தில் இந்திய வெளியுறவுத்துறை சட்ட விதிகளுக்கு முரணாக 263 சீனர்களுக்கு இந்திய விசா வழங்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது தெரியவந்தது. இதற்கு பின்னணியில் அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் தலையீடு நேரடியாக இருந்ததும் விசாரணை மூலம் சிபிஐ உறுதி செய்தது.

அதைதொடர்ந்து டெல்லி சிபிஐ, சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கியதாக சென்னையை சேர்ந்த கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரான எஸ்.பாஸ்கரராமன் முதல் குற்றவாளியாகவும், இரண்டாவது குற்றவாளியாக சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அனல் மின் நிலையம் அமைத்த தனியார் நிறுவனத்தின் பிரதிநிதி விகாஸ் மகாரியா மற்றும் பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியில் உள்ள தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் நிறுவனம், ரூ.50 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பெல் டூல்ஸ் லிமிடெட் நிறுவனம், அறியப்படாத அரசு உழியர்கள் மற்றும் முகவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

பின்னர் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை ஒரே நேரத்தில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வசித்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் நடத்தும் அலுவலகம் உட்பட 3 இடங்களில் டெல்லியில் இருந்து வந்த 14 சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள வீடு, மும்பையில் உள்ள நிறுவனங்கள், கர்நாடகா மாநிலம் கொப்பல் பகுதியில் உள்ள நிறுவனம், ஒரிசா மாநிலம் ஜார்சுகுடா பகுதியில் உள்ள நிறுவனம், பஞ்சாப் மான்சாவில் உள்ள நிறுவனம் என 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, சீனர்களுக்கு சட்ட விரோதமாக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்று கொண்டு மோசடி செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், ரூ.50 லட்சம் பணம் அனைத்தும் மும்பையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவு நிறுவனம் மூலம் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் பணம் கைகளுக்கு வந்ததற்கான ஆவணங்களும் சிக்கியது. இதுதவிர சீன நிறுவனத்திற்கு நீட்டிக்கப்பட்ட விசா சட்டவிரோதமாக மீண்டும் பயன்படுத்த அனுமதி வழங்க 30.7.2011 அன்று ஒன்றிய உள்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் இறுதியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னையில் அவரது வீட்டில் கைது செய்தனர். பிறகு விமானம் மூலம் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஆடிட்டரிடம் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ சோதனையின் போது ப.சிதம்பரம் ராஜஸ்தான் மாநிலத்திலும், கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருந்தனர்.

இதனால் வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் சிபிஐ அலுவலகத்தில் ஓரிரு நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதற்கான சம்மனை சென்னை வீட்டில் இருந்து ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் வழங்கி சென்றுள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்துள்ளதால், லண்டனில் இருந்து நாடு திரும்பும் கார்த்தி சிதம்பரத்தை இந்த வழக்கில் கைது செய்ய சிபிஐ வட்டாரங்கள் தயராக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா பெற்று தந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: