×

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம்

புதுடெல்லி: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனை, விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று காலை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரின் செயலுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு மே  21ம் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம்  தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.  

பேரறிவாளன் மீது வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் கீழமை நீதிமன்றம்  மரண தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். கடந்த 1999ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் 9 பேர் விடுவிக்கப்பட்டனர். பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு  ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

அதன்பின் கடந்த 2014ம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட நான்கு பேரின் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. தொடர்ந்து, தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சார்பில் 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையே, பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி ஒன்றிய அரசுக்கு, கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசு கருத்துரு அனுப்பியது.

இதை ஆய்வு செய்த ஒன்றிய அரசு, சிபிஐ வசம் இருக்கும் இந்த  வழக்கில், மாநில அரசு முடிவெடுக்க அதிகாரம் கிடையாது எனக் கூறி கருத்துருவை நிராகரித்தது. அதன்பின் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதப்படுத்தினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால், சுமார் இரண்டரை ஆண்டுக்குப் பிறகு இந்த விவகாரத்தை தமிழக  ஆளுநர், ஜனாதிபதியின் முடிவுக்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே, தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தபிறகு பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்ய கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். இதற்கும் ஆளுநர் எந்த ஒப்புதலும் தராமல் இருந்தார். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், ஆளுநரை நேரில் சந்தித்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். இந்த சூழலில், பரோலில் இருந்த பேரறிவாளன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தனி மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதற்கிடையே, பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் ஜனாதிபதிக்கு மட்டுமே முடிவு  எடுக்கும் உரிமை உள்ளது என்ற ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. இவ்வழக்கு மாநில அரசு தொடர்பானதால், மாநில அரசுக்கே முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் சுதந்திரத்தை  வைத்து அமைச்சரவை எடுக்கும் முடிவை மதிக்காமல் இருப்பது சரியல்ல.  பேரறிவாளன் ஆயுள் தண்டனை கைதி என்பதால், அவரின் விடுதலையில் ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அந்த தீர்மானத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியது  தவறு. அமைச்சரவை எடுத்த முடிவில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே  இல்லை. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் முடிவை  ஏற்றுக் கொள்ளாததன் மூலம், மிகப்பெரிய அரசியல் சாசன பிழையை தமிழக ஆளுநர்  செய்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க  போகிறோம்’ என்றனர். தொடர்ந்து, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல்  தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், பரபரப்பான இந்த வழக்கில் நேற்று காலை 10.50 மணிக்கு உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய  அமர்வு தீர்ப்பு வழங்கியது. முன்னதாக, வழக்கின் தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வக்கீல்கள் கூடியிருந்தனர். அப்போது நீதிபதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வாசித்தனர்.  

அந்த தீர்ப்பின் விபரம் வருமாறு: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161ன்படி, எந்த சட்டத்திற்கும் எதிரான குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபரின் தண்டனையை இடை நிறுத்தவும், தள்ளுபடி செய்யவும், தண்டனையை  குறைக்கவும், மன்னிப்பு வழங்கவும் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் நிறைவேற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருப்பதை சட்டப்பிரிவு 162 தெளிவுபடுத்துகிறது. மேலும், மாநில அமைச்சரவையின்  அறிவுரைக்கு கட்டுப்பட்டு, மாநில ஆளுநர், அரசியலமைப்பு சட்டத்தின் 161வது பிரிவின்கீழ் தனது அதிகாரத்தை செயல்படுத்த முடியும் என்பதை முன்பு இந்த நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்துள்ளது.  

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவு செய்து மாநில ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பிய நிலையில், அந்த பரிந்துரையை ஆளுநர் இரண்டரை ஆண்டுகள் கழித்து ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்துள்ளார். அப்படி அனுப்பியது அரசியலமைப்பு சட்டத்தின்படி செல்லுபடியாகும் நடவடிக்கை அல்ல. இது அரசியலமைப்பு சட்டத்தின் செயல்பாட்டுக்கும் விரோதமானது. இதன் மூலம் மாநில அரசின் கருத்தை ஆளுநர் பிரதிபலிக்கவில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.

161வது பிரிவின் கீழ் மாநில  அமைச்சரவை குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுவிக்கும் முடிவை எடுத்திருக்கும்  போது, வேண்டுமென்றே செய்யப்படுகின்ற கால தாமதம் மன்னிக்க முடியாதது. இது  சம்மந்தப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட நபரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்  பாதிக்கக் கூடியது. இந்த விவகாரத்தில் ஆளுநர் அனைத்து சட்ட விதிகளையும்  மீறி உள்ளது தெளிவாக தெரியவருகிறது. இந்திய தண்டனை சட்டத்தின் 302வது  பிரிவின் கீழ் தண்டனை குறைப்பு வழங்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு உள்ளதாக  வேறொரு தீர்ப்பை சுட்டிக்காட்டி குறிப்பிடப்பட்டிருப்பது, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட விஷயமாகும்.

அரசியலமைப்பு சட்டமோ, இந்திய தண்டனைச் சட்டமோ, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேறு சட்டங்களோ அப்படி தண்டனை குறைக்கும் வெளிப்படையான நிர்வாக அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கவில்லை. எனவே, தண்டனை குறைக்கும் அதிகாரம் என்பது சட்டப்பிரிவு 302ன் கீழ் மாநில அரசுக்கே உள்ளது. பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. அதனால் இந்த விவகாரத்தில் பேரறிவாளனின் சிறை நன்னடத்தை, அவரது உடநலம், மருத்துவ பரிசோதனை, இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்தது ஆகிய அனைத்தையும்  கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்த கோரிக்கையை மீண்டும் ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்புவது பொருத்தமற்றது. இதன் காரணமாக, உச்ச நீதிமன்றத்தின்  தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை நேரடியாக விடுதலை செய்கிறோம். இந்த உத்தரவை ஏற்று பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய  வேண்டும்.
இவ்வாறு, 3 நீதிபதிகளும் ஒரே மாதிரியாக தீர்ப்பளித்தனர்.

இந்த  தீர்ப்பின் மூலம், கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவு சிறைத்துறைக்கு நேற்று வந்தது. உடனடியாக ஜாமீனில் இருந்த நிலையிலேயே அவரை விடுதலை செய்து சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. அதனால் இந்த விவகாரத்தில் பேரறிவாளனின் சிறை  நன்னடத்தை, அவரது உடநலம், மருத்துவ பரிசோதனை, இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்தது ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்த கோரிக்கையை மீண்டும் ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்புவது பொருத்தமற்றது.

முக்கிய வாதங்கள்
* ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கு பேட்டரி நான் வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ தரப்பில் இதுவரை கொடுக்கப்படவில்லை’ என்று பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
* பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதி நிராகரித்து விட்டார்.
* மாநில ஆளுநர் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்திருந்தும், அவர்கள் அதனை கருத்தில் கொள்ளவில்லை.
* அரசியல் சாசன சட்ட விதி 302ன் கீழ் தண்டனை பெற்றவர்களின் விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு தான் அதிகாரம் என்ற ஒன்றிய அரசு தரப்பு வாதங்கள் ஏற்கப்பட்டால், இத்தனை ஆண்டுகளாக ஆளுநர் 161ன் கீழ் அளித்த மன்னிப்பு, தண்டனை குறைப்பு ஆகியவை அரசியல் சாசனத்துக்கு முரணானதாகி விடும்.
* ‘தமிழக அமைச்சரவை முடிவை. ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பியது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர். அவ்வாறு இருக்கையில் தன்னிச்சையாக அவர் முடிவெடுக்கவோ, செயல்படவோ முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

Tags : Perarivalan ,Rajiv Gandhi ,Supreme Court ,Governor , Perarivalan jailed for 31 years in Rajiv Gandhi murder case: Supreme Court issues sensational verdict; Strong condemnation of the action of the Governor
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...