எஸ்.பி. ஆபீசில் காவலர் புகார் பெட்டி குமரியில் போலீசாரின் குறைகள் தீர்க்கப்படுமா?

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் எஸ்.பி. அறிமுகம் செய்துள்ள காவலர் புகார் பெட்டிக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு போலீசார் மத்தியில் அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் போலீசாரின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில்,  எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் உத்தரவுப்படி எஸ்.பி. அலுவலகத்தில் காவலர் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. அலுவலக கீழ் தளத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் போலீசார் தங்களது குறைகளை, புகார்களை மனுவாக எழுதி அளிக்கலாம். இந்த புகார் பெட்டியின் சாவி எஸ்.பி.யிடமே இருக்கும். எஸ்.பி., முன்னிலையில் புகார்  பெட்டி திறக்கப்பட்டு, அதில் உள்ள மனுக்கள் எஸ்.பி.யிடம் நேரடியாக ஒப்படைக்கப்படும். எனவே போலீசாரின் குறைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை காவல்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது : காவல்துறையினருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. காவல் நிலையங்களில் போதிய போலீசார் இல்லை. காவல் நிலையங்களில் பணியாற்றும் பலர், அதர் டூட்டி என்ற நிலையில் வெவ்வேறு இடங்களில் பணியாற்றி வருகிறார்கள். முதலில் இதை ஒழுங்குப்படுத்த எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த காவல் நிலையங்களுக்கான ஒதுக்கீடு படி போலீசாரை நியமிக்க வேண்டும். அதர் டூட்டி என்ற பெயரில் வேலையே பார்க்காமல் இருப்பவர்களை எச்சரித்து காவல் நிலைய பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு காவல் நிலையங்களில் போலீஸ் பற்றாக்குறை தீர்க்கப்படும் பட்சத்தில் பணியில் உள்ளவர்களுக்கு போதிய ஓய்வு கிடைக்கும்.

 

வார விடுமுறை மற்றும் மருத்துவ விடுமுறைகள் கிடைக்கும். காவல்துறையினர் ஓய்வு இல்லாமல் பணியாற்றுவதே பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. காவல் நிலையங்களில் இருப்பவர்களே ரோந்து பணி, கோர்ட் பணி மற்றும் பல்வேறு பணிகளை செய்ய வேண்டி உள்ளது. இதனால் காவல் நிலையங்களில் உள்ள போலீசார் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பிறந்தநாள், திருமண நாள் போன்றவற்றுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ஆனால் குமரி மாவட்ட காவல் நிலையங்களில் அது போன்ற நிலை இல்லை. முறையாக வார விடுமுறை கூட இல்லாத நிலை உள்ளது. மேலும் கடந்தாண்டுகளில் ஒரு சில அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக போலீசார் பலர் பந்தாடப்பட்டுள்ளனர். தவறே செய்யாமல் துறை ரீதியான இடமாறுதலுக்கு உள்ளாகி உள்ளனர். இது போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றை  தற்போதைய எஸ்.பி. தீர்த்து வைப்பார்? என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.

Related Stories: