லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது 3 பேர் உடல் கருகி பரிதாப சாவு: திருப்பதி அருகே சோகம்

திருமலை: திருப்பதியில் இருந்து ஸ்ரீசைலத்திற்கு சென்றபோது லாரி மீது கார் மோதி தீப்பிடித்தது. இதில் 3 பேர் கருகி இறந்தனர். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் பாக்ராபேட்டையை சேர்ந்தவர் இம்ரான் (21). இவர் தனது நண்பர்களான ரவூரிதேஜா (29), சகிரிபாலாஜி (21) ஆகியோருடன் நேற்று மாலை பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சைலத்திற்கு காரில் சென்றனர். ரவூரிதேஜா காரை ஓட்டினார். மார்க்கபுரம் அடுத்த திப்பைப்பாலம் அருகே சென்றபோது கார் டயர் திடீரென வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி விஜயவாடாவில் இருந்து பெங்களூர் நோக்கி எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் கார் தீ பிடித்து எரிந்தது. காரில் இருந்தவர்கள் இடிபாட்டில் சிக்கி தவித்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

உடனே தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் சில நிமிடங்களிலேயே கார் எரிந்து கருகியது. காரில் பயணம் செய்த டிரைவர் ரவூரிதேஜா (29), பதான்இம்ரான்கான் (21), சகிரிபாலாஜி (21) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்து மார்க்கபுரம் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: