வீடு ஒதுக்கீடு பெற்று தருவதாக ரூ.4 கோடி மோசடி செய்த 4 பேர் கைது

திருவொற்றியூர்: சென்னை தண்டையார்பேட்டை, வஉசி நகரை சேர்ந்தவர் பெருமாள் (48). குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர். இவரிடம் கடந்த ஆண்டு எம்கேபி நகரில் நகர்ப்புற வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்று தருவதாக திருவொற்றியூர், சடையங்குப்பம் பாட்டையை சேர்ந்த முருகன் (32), இசக்கிமுத்து (53) ஆகிய இருவரும் ₹7 லட்சம் வாங்கியுள்ளனர். சில நாட்கள் கழித்து பெருமாளிடம் வீடு ஒதுக்கீட்டு ஆணையை இருவரும் கொடுத்துள்ளனர். எனினும், அவருக்கு வீடு கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகனிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

இதுதொடர்பாக தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் பெருமாள் விசாரித்தபோது, அது போலி ஒதுக்கீடு ஆணை எனத் தெரியவந்தது. இதனால் முருகனிடம் பணத்தை திருப்பிக் கேட்டபோது, பெருமாளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இப்புகாரின்பேரில் கடந்த மார்ச் மாதம் திருவொற்றியூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதேபோல் பலரிடம் நகர்ப்புற வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு ஆணை பெற்று தருவதாக முருகன், இசக்கிமுத்து ஆகிய இருவரும் பலகோடி மோசடியில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே பணம் பறிபோன விரக்தியில் பெருமாள் மாரடைப்பால் காலமானார்.

 இதைத் தொடர்ந்து, இப்புகார்மீது போலீசார் தீவிரமாக விசாரிக்க அவரது சகோதரர் கோபி வலியுறுத்தினார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று மாலை பலகோடி பணமோசடியில் ஈடுபட்ட முருகன், இசக்கிமுத்து, கலியபெருமாள் (65), சதீஷ் (45) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், பெருமாள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்களிடம் இக்கும்பல் சுமார் ₹4 கோடி பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: