×

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்‍கில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர், 2020 ஆம் ஆண்டு காவல் துறையினர் தாக்கியதில் உயிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், 20 மாதங்களுக்கு மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்த போது முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரகு கணேஷுக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தில் சாட்சியங்கள் அழிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Tags : Raghu Ganesh ,Satankulam , Sathankulam father-son murder, pro-investigator, bail, iCord branch
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்