கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் தடுப்பணை மதகுகள் திறப்பு: கலெக்டருக்கு விவசாயிகள் நன்றி

கண்ணமங்கலம்:  கண்ணமங்கலம் அருகே ஆயிரம் ஏக்கரில் கொளத்தூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சிங்கிரி கோயில் அருகே நாகநதி ஆற்றின் குறுக்கே  தடுப்பணையிலிருந்து ஏரிக்கால்வாய் வழியே நீர் வருகிறது. இதன்மூலம் 40க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்புகிறது. இந்த தடுப்பணை இரண்டு வருடங்களுக்கு முன் ₹86 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. ஜவ்வாது மலைத்தொடரில் சிறிய அளவில் சாதாரண மழை பெய்தால் கூட நாகநதியில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் மழையால் இந்த நதியில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஏரிக்கால்வாய்க்கு நீர் செல்லும் மதகுகள் மூடி வைக்கப்பட்டுள்ளன.இதனால் ஏரிக்கால்வாயில் நீர் செல்லாமல் ஆற்றில் வீணாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என கூறப்படுகிறது.

ஏரிகளில் நீர் நிரம்பினால் ஏரி மதகுகளை திறந்து விட்டு ஏரி நீரை வீணாக வெளியேற்றுவதும், ஏரிக்கால்வாய்க்கு நீர் வராமல் அணைக்கட்டு மதகுககளை மூடி வைப்பதுமாக விவசாயிகளுக்கு எதிர்மாறான செயல்களில் ஈடுபட்டு வருவதும், மீன் வளர்ப்பவர்களுக்கு சாதாகமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே, மதகு திறந்து நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றும், மீன் பிடிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதுகுறித்து, தினகரன் நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவின்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொளத்தூர் அணைக்கட்டுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் மதகுகளை திறந்து ஏரிக்கால்வாயில் நாகநதி நீர் செல்வதற்கு ஏற்பாடு செய்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டர் பா.முருகேஷ் மற்றும் செய்தி வெளியிட்ட ‘‘தினகரன்’’ நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: