திருப்பத்தூர் பகுதிகளில் தொடர் மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. கடந்த 3 நாட்களாக வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது.

இந்த நீர்வீழ்ச்சியில் சிறிதளவு மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருந்தது.  கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் ஏரி நிரம்பி, தற்போது ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் திருப்பத்தூர், வேலூர், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து, நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டுவிட்டு செல்கின்றனர்.  மேலும், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருகே உள்ள ஜடையனூர், மாடப்பள்ளி, மடவாளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: