பெய்து வரும் தொடர் மழையால் 100 டன் கத்திரிக்காய் மகசூல் பாதிப்பு: விவசாயிகள் கவலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், 100 டன் கத்திரிக்காய் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளாப்பள்ளி, தின்னகழனி, பூசாரிப்பட்டி, வட்டுகம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அணையின் நீர்மட்டம் குறையும் போது, நீர்தேக்க பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக குறுகிய காலங்களில் அறுவடை செய்யப்படும் முள்ளங்கி, கத்திரிக்காய், ராகி, நெல் உள்ளிட்டவை பயிரிடுவது வழக்கம். தற்போது இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் 40 அடிக்கு கீழ் சென்றது. இதனால் விவசாயிகள் அணையின் நீர்தேக்க பகுதியில், சுமார் 5 ஏக்கரில் கத்திரிக்காய் சாகுபடி செய்திருந்தனர். சாகுபடி செய்து 3 மாதத்தில் மகசூல் தரக்கூடிய கத்தரிக்காய் செடிகள் நடவு செய்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்துவரும் கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கி 50அடியை எட்டியுள்ளது.

இதனால் அணையின் நீர்தேக்க பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், 5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கத்திரிக்காய் செடிகள் நீரில் மூழ்கி சேதமானது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: குறைந்த காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய கத்தரி செடிகள், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ஏக்கருக்கு ஒரு லட்சம் வீதம் செலவிட்டு சாகுபடி செய்தோம். 3 மாதத்தில் மகசூல் தரக்கூடிய நிலையில், மாதத்திற்கு உரம் மருந்து என ₹30ஆயிரம் செலவு செய்யப்பட்டது. தற்போது கத்தரிக்காய் அறுவடை தொடங்கி உள்ளது. ஒரு ஏக்கருக்கு, ஒரு அறுவடைக்கு இரண்டு டன் அளவிற்கு கத்தரிக்காய் மகசூல் கிடைக்கும். வாரத்திற்கு ஒரு அறுவடை என மூன்று மாதத்திற்கு 12 முதல் 15 முறை வரையில் அறுவடை செய்யலாம். இதன் மூலம் ஏக்கருக்கு, சுமார் 25 டன் அளவிற்கு கத்திரிக்காய் மகசூல் கிடைக்கும்.

தற்போது முதல் அறுவடையில் 2 டன் கத்தரிக்காய் மகசூல் கிடைத்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் கத்தரிக்காய் ராயக்கோட்டை மார்க்கெட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு கிலோ கத்தரிக்காய் ₹12க்கும், ஒரு டன் ₹12ஆயிரத்திற்கும் கொள்முதல் செய்யபடுகிறது. தற்போது நீரில் மூழ்கிய கத்திரிக்காய் செடிகளால், ஏக்கருக்கு ₹2லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 100 டன் அளவிற்கு கத்தரிக்காய் மகசூல் பாதிக்கப்பட்டு ₹12 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

Related Stories: