திருத்துறைப்பூண்டி நகராட்சி குப்பை கிடங்கில் தீ

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நகரில் உள்ள குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே குப்பை பிரித்து உரம் தயாரிக்கும் பணியும் அதன் அருகிலேயே எரிவாயு தகன மேடை ஒன்றும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் யாரோ மர்ம நபர்கள் நகராட்சி குப்பை கிடங்குக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து திருத்துறைப்பூண்டி நகர்மன்றதலைவர் கவிதா பாண்டியன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர் மேலும் நகராட்சியில் உள்ள மூன்று தண்ணீர் டேங்கர் லாரி மூலமும் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்துவருகிறது.

எம்எல்ஏ மாரிமுத்து, தாசில்தார் அலெக்சான்டர், சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். காலை 11 மணியிலிருந்து குப்பைமேடு எறிந்து வருவதால் வேதை சாலை பகுதிகளில் ஒரே புகை மூட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தீயணைக்கும் பணி நடைபெற்றது.திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட சாமியப்பா நகர் பின்பகுதியில் உள்ள வயலில் நாணல் புற்கள் மண்டியிருந்த பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இது குறித்து திருத்துறைப்பூண்டி தீயணைப்பு துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்புதுறை நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

Related Stories: