வத்தல்மலை கொண்டை ஊசி வளைவில் இரும்பு தடுப்பு வேலி: விரைவில் பஸ் போக்குவரத்து துவக்கம்

தர்மபுரி: தர்மபுரி வத்தல்மலை அபாயகரமான கொண்டைஊசி வளைவில், விபத்துக்களை தடுக்கும் பொருட்டு இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து விரைவில் வத்தல் மலைக்கு 40 இருக்கையுடன் கூடிய பஸ் போக்குவரத்து தொடங்கப்படம் என அதிகாரி தெரிவித்துள்ளார்.தர்மபுரி வத்தல்மலையில் பெரியூர், பால்சிலம்பு உள்ளிட்ட 13 மலைக்கிராமங்கள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து, சுமார் 1500 மீட்டர் உயரத்தில் வத்தல்மலை உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு சில்வர் ஓக் மரங்கள், காபி பயிர் சாகுபடி பரவலாக காணப்படுகின்றன. மேலும் சோளம், கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை சாகுபடி செய்து வருகின்றனர். வத்தல்மலை அடிவாரத்தில் இருந்து மலைப்பாதையில் வழியாக, சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் மலைஉச்சியை அடையலாம். அங்கிருந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-2012ம் ஆண்டு அடிவாரத்தில் இருந்து வத்தல்மலை மேல் பகுதி வரையிலும், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை சார்பில், 23 கொண்டை ஊசி வளைவுகளுடன் சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைத்த பின்னர், தங்களுக்கு பஸ்வசதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மலைவாழ் மக்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வத்தல்மலைக்கு வருகை தந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்ற முதல்வர், பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி கடந்த 8ம் தேதி 40 இருக்கை கொண்ட சிறிய ரக பஸ்சை இயக்கி சோதனை செய்தனர்.

அடிவாரத்தில் இருந்து மேல் பகுதிக்கு செல்ல 50 நிமிடங்கள் ஆனது. 30 கிலோ மீட்டர் வேகத்தில் பஸ் இயக்கி பார்க்கப்பட்டது. ஒருசில அபாயகரமான கொண்டைஊசி வளைவில், பாதுகாப்பிற்காக இரும்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், மலைப்பாதையில் உள்ள கொண்டைஊசி வளைவில் இரும்பு தடுப்பு வேலி அமைத்துள்ளனர். இனி சிறிய ரக பஸ் இயக்க வத்தல்மலை சாலை தயாராக உள்ளதாக, அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: