பழநி-ஈரோடு அகல ரயில்பாதை 100 ஆண்டு கனவுதிட்டம் நிறைவேறுமா?: மக்கள் எதிர்பார்ப்பு

பழநி: 100 ஆண்டுகால கனவுத்திட்டமான பழநி-ஈரோடு அகல ரயில்பாதை திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டகால கனவுத்திட்டம் பழநி-ஈரோடு அகல ரயில்பாதை திட்டம். 1915ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. திண்டுக்கல் பகுதியில் அதிகளவு நெல், பருத்தி மற்றும் மானாவாரி பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இவற்றை விற்பனை செய்ய வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல இதுநாள்வரை லாரி போன்றவைகளே அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து செலவு கட்டுப்படியாகாததால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை குறைந்த விலைக்கு இங்குள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

 அதுபோல் பழநி நகருக்கு அகல ரயில்பாதை வசதி இல்லாததால் தற்போது வடமாநில பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. எனவே, ஆங்கிலேயர் காலத்தில் உண்டாக்கப்பட்ட பழநி-ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.     இதன் காரணமாக கடந்த 2004ம் ஆண்டு இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து முதல் கட்ட சர்வே பணிக்காக ரூ.2 கோடி ஒதுக்கியது. தொடர்ந்து 2006 மற்றும் 2008ம் ஆண்டுகளில் அடுத்தடுத்த சர்வே பணி நடத்தப்பட்டு ரூ.380 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2010, 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் மத்திய அரசு இத்திட்டத்திற்கு முறையே ரூ.40 கோடி, ரூ.33 கோடி, ரூ.12 கோடி என ரூ.85 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இதன்பிறகு இத்திட்டத்திற்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பழநியில் இருந்து தாசநாயக்கன்பட்டி, தாராபுரம், நல்லிமடம், ஊதியூர், காங்கேயம், சென்னிமலை, ஈங்கூர் வழியாக 91.5 கிலோமீட்டர் தொலைவில் ஈரோட்டிற்கு ரயில்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 6 பெரியபாலம், 42 சிறியபாலம், 23 ரயில்வேகேட் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இறுதிக்கட்ட சர்வே பணி மற்றும் நில கையகப்படுத்தும் பணி அரசியல் கட்சிகளின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது மீண்டும் இத்திட்டம் முடங்கிப்போய் உள்ளது.  

இதுகுறித்து பழநி ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பச்சைமுத்து கூறுகையில், நிலம் கையகப்படுத்தும் இடத்தில் அரசியல் பிரமுகர்களின் வீட்டுமனைகள் அடிபடுகின்றன. இதனால் அரசியல் தலையீடு காரணமாக அப்பணி காங்கேயம் மற்றும் சென்னிமலை பகுதியில் பாதியில் நிற்கிறது. எனவே, மாநில அரசு நிலம் கையகப்படுத்துதலை துரிதப்படுத்தி, பங்குத்தொகையை வழங்கி முடங்கிக் கிடக்கும் நீண்ட நாள் கனவுத்திட்டமான பழநி-ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்திற்கு உயிர்கொடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: